மணி கட்ட யார்??

பொய்யான கூட்டங்கள்
புனைந்திடும் வேடங்கள்
மெய்யில்லை எனவறிந்தும்
பொய்யொழிக்கத் துணியாதேனோ!

அறக்கட்டளைப் பேரிலே!
அநியாயப் பொய்யதிலே!
கல்வியும் மருத்துவமும்
கருப்புப் பணம் ஆகுதய்யோ!

எச்சில்க்கை நக்குவோர்
பிச்சையிடத் துணிவரோ!
பச்சமில்லா பாவியரே!
பகல்வேடம் போடுகிறார்!

நல்ல கல்வி மருத்துவங்கள்
வல்லோரே பெறும் நிலைகள்.
உள்ளதாகிப் போனதய்யோ!
எல்லோர்க்கும் எல்லாமெப்போ!

அரசியல் யோக்யர்களே!
புரவலர் புண்ணியர்களாம்!
உரசவும் முயல்வதாரோ!
ஒலிக்க மணி கட்டுவதாரோ!

எலிகளென மக்களையும்
இழியவும் மனமில்லையே!
பூனையெனக் கர்ணர்களையும்
புகழ்வதும் பொருத்தந்தானோ!

இலவசக் கல்வி தந்தார்.
ஏழைக்கு வாழ்வளித்தார்.
சென்றதால் கர்ம வீர்ர்
கல்வி மருந்தும் வாணிபமோ!

மற்றதென்ன இலவசமோ!
உற்றதென்ன இலாபமோ!
ஓட்டுக்கான அரசியலோ!
ஓழிந்தழிவதும் எந்நாளோ!

காமராசர் பிறப்பாரோ!!
ஓமமொன்றும் வளர்ப்பாரோ!!
சேமமெல்லாம் பெறுவோமோ!
பாவங்களும் தீர்ந்து போமோ!


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா . (17-May-13, 10:50 am)
பார்வை : 95

மேலே