[445] நாணுவீர் கரியைப் பூச...! (அறுசீர் விருத்தம்)

நாணுவீர் கரியைப் பூச!

முரண்படப் பேச லாம்தான்,
முகத்திலே அறைய லாமோ?
திறம்படப் பேச வேண்டின்,
தேவையோ பழிக்கும் சொற்கள்?
குறைகளைச் சொல்ல வந்து
குறைபட நடக்க லாமோ?
நரைமறைத் திடவந் தோரே!
நாணுவீர் கரியைப் பூச!

அறிவினை வளர்ப்ப தற்கே
அரிவாளும் தேவை தானோ?
வரிகளை எழுத்தில் சேர்ப்போம்!
வளங்களை மனத்தில் சேர்ப்போம்!
நெறிகளை நினைவில் வைப்போம்!
நெருக்கடி தவிர்த்து நிற்போம்!
பொறிகளில் மாட்டிக் கொள்ளா
புலங்களில் நடந்து வெல்வோம்!

(வேறு)

காலத்தே திருந்தி கைகளால் வருந்திச் செயலாற்று!
கோலத்தை விடவும் கொள்கையால் உன்னை நிலைநாட்டு!
சீலத்தைக் காட்டிச் சிறப்பினைக் கூட்டி வழிகாட்டு!
ஓலத்தில் வந்தே ஓலத்தில் போவதிவ் விளையாட்டு!
==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன்! (17-May-13, 9:53 am)
பார்வை : 147

மேலே