ஈழம் சொல்லும் ஓலக் கதை..

செங்குருதிச் சிரம் தெறிக்க,
...சிவந்த வானம் மங்கும் அளவு,
உதிரம் சிந்திய எம் ஊமை உயிர்கள்,
...உரமாகி உறைவர் உள்ளுக்குள்ளே..

நெஞ்சத்துச் சோகம் நஞ்சென பரவ,
...நாளும் உயிர்கள் நிலையென மடிய,
வஞ்சத்துப் பகையை வைத்தவன் யாரோ,
...வாழும் தேசம் வக்கிரம் நிறைந்ததே..

சிங்களத் தமிழ் சலசலக்கும் வீதியிலே,
...செங்குருதி நிலையாய் வழிவதேனோ,
ஒரு அங்குல துணியை இரந்து பெற்றோம்-மனம்
...வருந்தி மானம் மட்டும் காத்திடவே..

ஆண்டவன் கொண்டான் ஆண்டிக் கோலம்,
...இன்றைய அகதிக் கூட்டமும் அதுவல்லவோ-தப்பித்து
மீண்டவன் குண்டுக்கு உயிர் விடுவான்,
...சேற்றுச் சகதிக்கு பின்பு உடல் கொடுத்து..

இனப் படுகொலை இவனது வேலை,
...ஈனங்கள் ஆளும் ஈழமிது,
பணம் பிடுங்களைப் பற்றியது நம் அரசே,
...தானங்கள் செய்தது நம் உயிரை ஊராருக்கு..

கர்ப்பம் தரித்துப் பிறக்கும் சிசு கூட,
...தமிழினத்தில் இருக்கக் கூடாதென,
அற்ப்பம் நிறைந்த ஈனப் பதர்கள்,
...உடலிணைப்பில் உக்கிர வக்கிரம் புரிந்தார்..

வாழ்விழந்தோமே, வாழ மறந்தோமே,
...வாடைக் காற்றிலும் துரோக வாசணை,
கீழ் விழுந்தோமே, கீறல்கள் நிறைந்தோமே,
...ஓடை முற்றிலும் ஓயாத இரத்த வெள்ளம்..

ஈழம் தவிர்க்க ஈமம் செய்யும்,
...ஈகைப் பண்பு பிறந்ததுமிங்கே,
காலம் வடித்த கவிதையிது,
வாகை சூட்டுது இனப் படுகொலைக்கு..

துணிவின் துணையோ துளியும் இல்லை,
...தடயங்கள் தகர்த்து துடைக்கப் பட்டோம்-பசிப்
பிணியில் நாளும் உழன்று,
...இதயங்கள் வெடிக்கச் சாகிறோம் இங்கே..

எழுதியவர் : பிரதீப் (17-May-13, 12:16 pm)
பார்வை : 168

மேலே