புழுதியில் மொட்டுவிடும் புலரி

புயல் எழும் ஓர் பொழுதில்
புல் முளைத்து மொட்டுவிட்டு
புது மலராய்
பூத்தவள் நான்

புதுமைகளை மனதில்
புதைத்து - தினம்
புதிது புதிதாய்
புலரும் புலரி நான்

புது விதையில் முளைத்த
புதினம் நான்
மாறும் உலகின் - ஒரு
மாற்றம் நான்

செவ்வாய்க்கு வண்டி கட்டி
செல்லும் என் அறிவு
சூரியனில் குளிர்காய -
எண்ணும் என் நினைவு

நினைத்தது வேண்டும்
வேண்டியதே நினைப்பேன்
பாதைகள் சறுக்கியதில்லை
பயணங்கள் முடிந்ததில்லை

போதும் என்ற எண்ணம் - இதுவரை
போதும் என்று எண்ணியதே இல்லை
வேண்டும் என்பேன் எதுவும் - என்
தேவை என்பேன் அனைத்தும்

நிஜத்தை மூட்டை கட்டி எரியும்
நிழல் நான் - அந்த
நிழலையும்
நோஜமாக்கும் புயல் நான்

தடுக்கி வீழ்வதெல்லாம்
தடையென எண்னேண் - நான்
பயிலக் கிடைத்த ஒரு
பாடமாய் அமைப்பேன்

கண் காண்பதெல்லாம்
கண்மயக்கல்ல - நான்
தொடுவதொன்றும்
தொலைவதல்ல

போருக்குள் ஒரு பூச்செடி வளர்ப்பேன்
பூமிக்குள் ஒரு வானம் காண்பேன்
புயலுக்குள் ஒரு புதுமை கொள்வேன்
பூவுக்குள் ஒரு வீடு செய்வேன்

நான் நேசிக்கும் என்
சமூகம் - சந்தோஷ
சகதிக்குள் எப்போதும்
சங்கமமாய் ஆக வேண்டும்


பூக்களைக் கொண்டு ஒரு
புதுமை படைப்பேன்
விநோதமாய் ஒரு
விந்தை அமைப்பேன்

சமகால சரித்திரம்களுள்
சற்றேனும் விடாமல் - வன்முறையை
முளையிலே கிள்ளி
முள்ளேடுப்பேன்

காம்பில் தேன் பிழிந்து
கண்கவர் காட்சியமைத்து
பட்சிகள் பாட்டிசைக்க
பசுமையை நான் பண்ணுவேன்

தூசுதட்டித் துயர் போக்க
துன்பம் களைந்து
மனிதனுக்கோர்
மகிமை நான் கொடுப்பேன்

துர்வாடை இல்லாத
தூய்மையான காற்றை
நடை பாதை நெரிசலிலும் - நான்
சுகமாய் சுவாசிப்பேன்

இயந்திரமாய் மனிதன்
மாறினும் - நான்
மட்டும் பட்டாம் பூச்சியாய்
பல வண்ணம் கொண்டு சிறகடிப்பேன்

அசையாது நாற்காலியில்
அமர்ந்து கொண்டு
அண்ட சராசரமும் ஆள்பவன் - என்
அறிவொன்றால்

அனைத்து மறிந்த
சதாவதனாய்
விந்தை பூண்டு ஒரு
விஸ்வரூபம் காண்பேன்

பூக்களை தாலாட்டியும்
பாக்களை சீராட்டியும்
நதிகளில் நடை பழகியும்
நாளும் நான் நெகிழ்வேன்

அக்கினியில் தினம் குளித்தும்
தண்ணீரில் குளிர் காய்ந்தும்
நிதம் ஒரு யாகம்
நீங்காது நான் புரிவேன்

புது யாகம் படைத்து
புன்னகையை விதைத்து
அன்பினை பாராட்டி
வசந்தமதை சீராட்டுவேன்

நிசப்த அலைவரிசைகளில்
நிதமும் ஒரு கானம் - என்
இதயம் மட்டும்
இதமாய் பருகுமத்தை

புதுமைகளை
விதை விதைத்து
புழுதியிலும் மொட்டுவிடும்
புலரி நான் .......!!

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (28-May-13, 7:08 pm)
சேர்த்தது : ரோஷானா ஜிப்ரி
பார்வை : 74

மேலே