நீ வளி, என் வலி, இது யார் வழி?
தரையில் பிறந்தேன்
தாய் மடி கண்டேன்
தவழ்ந்து நடந்தேன்
தாழ்குணம் தவிர்த்தேன்
உயர் என்றது என் கல்வி
ஊர் நிறை என்றது சமூகம்
சேர் வளம் என்றது குடும்பம்
பார் அள என்றது அறிவு
சோர்வடை என்றன சிக்கல்கள்
சந்தைக்கு வந்தேன் சங்கதிகள் கண்டேன்
திருமண பேச்சுக்கள் கணக்குப்பாட எதிரொலியாக
விடா குறை தொடா குறையோ
பொருள் கூட்டலாக, அழகு கூட்டலாக பெண்ணாம்
வருமானம் கூட்டலாக சமூக நிலை தூக்கலாக ஆணாம்
இந்த கூட்டல் கணக்கில்
மனங்கள் மட்டுமே கழித்தலாக
திருமணமாம்
இதில் கடன் வாங்கி கழித்தலும்
ஈவு கொடுக்கும் வகுத்தலும் உண்டாம்.
ஆணுக்கு வருமானத்தில்
மேல்வரும்படியும் உண்டாம்
கடன் வாங்கி கழித்தல்----
பெண் அழகு குறைவு என்றால்,
பொருள் கூடுமாம்
அழகுக்கு ஈவு கொடுக்கும் விதி வகுத்தல்
யதார்த்தம் இங்கே வளியாகி நிற்கிறது
நான் இங்கே வலியாகி நிற்கிறேன்
சந்தை சங்கதிகளால்
இது யார் வழியோ?