கண்ணீரில் மிதந்தபடி(குமார் பாலகிருஷ்ணன்)
நடத்துனரை நட்பாக்கி
நண்பன் தோளை துணையாக்கி
படிதாண்டாப் பேருந்துப் பயணங்கள்
பயணத்தில் எச்சில் பண்டங்கள்...
இயந்திரமின்னணுவியல் குறித்து
இருவர் பேசிக்கொண்டால்
அதில் ஒருவரி தவறானால்
முடிவான அடிதடிகள்
தேர்வுக்கான விடுமுறையை
தேர்வன்றும் அதிகரித்த
அந்த நொடிகள்..
அவன் சட்டை
தொட்ட கையை
வெட்ட விரைந்த
கோபங்கள்
அவனை வெட்டி
என்ற வாத்தியை
திட்டித் தீர்த்த
.சாபங்கள்..
என எண்ணி அழுகிறது
எண்ணமும்
என் எண்ணம் விரிகிறது
இன்னமும்...
என் கண்ணீர் மண்ணைத்
தொட்டது இன்றுதான்
முதல்முறை
காரணம் என் நண்பனின்
முடிவுரை..
நான் காலொடிந்து போகயிலே
சிறகொடிந்து போனவனே..
நான் மௌனமாக இருந்ததனால்
மனமொடிந்து நின்றவனே..
நீ நடந்த தடமுண்டே
உன் நிழல் விழுந்த இடமுண்டே
நீயாக நானுண்டே
நீயான நான் எங்கே??
மெல்லமாக நீ திரும்பி
கள்ளமாக எனை முறைத்து
செல்லமாக எனைத் திட்டி
வெல்லமாக நீ பேசயிலே
பள்ளமான என் உள்ளம்
வெள்ளமாக மாறிடுமே..
எவரெஸ்ட்டும் என் முன்னால்
குள்ளமாக தோன்றிடுமே..
செல்லாத காசென்னை
செல்லாதே என்பவனே
சொல்லாமல் சென்றதென்ன??
சொல்லாத நகைச்சுவைக்கு
பொல்லாமல் சிரித்தவனே
இல்லாமல் கொல்வதென்ன??