துணிந்து நில் !!
என்ன வாழ்க்கை இதென்று
அலுத்துவிட்டாய் என்றால் - நீ
இளைஞன் ஆனாலும் இயலாதவனே !
இனிமேல்தான் வாழ்க்கையென்று
உறுதி கொண்டால் - நீ
முதுமையிலும் இளைஞனே !
சாதிக்கத் தவறிவிட்டால்
சுவாசமும் உனக்கு சுமையாகும்
தோல்வியே உனக்கு மாலையிடும் !
சாதிக்கும் எண்ணத்தையே மறந்தால்
கண் சிமிட்டவும் கடினமாகும்
வாழ்வின் அர்த்தமும் வெறுமையாகும் !
கதவு தட்டும் சில சந்தர்ப்பங்களும்
கண் இமைக்கும் நேரத்தில் பறந்துவிடும்
மதி விழிக்காவிட்டால் மாயமாகிவிடும் !
சிறு புல் கூட மேல் நோக்கியே
வாள்போல் முளைத்து வருகின்றது
எதிர்ப்புகளை தள்ளிவிட்டு வளர்கின்றது !
வீரநடை போடவேண்டிய நீயோ
தலைகுனிந்து நடக்கின்றாய்
அவமானங்களே உன்னை வரவேற்கின்றது !
சூழ்நிலைக் கைதியாகி விட்டதாய்
கடந்தகால தோல்விகளுக்கு
சமாதானம் சொல்லி வந்தது போதும் !
சூளுரைத்து வெகுண்டெழுந்து பார்
சிந்தனையைக் கூர்படுத்தி நில்
வாழ்க்கை வாழ்வதற்கென்று சொல் !
உன்முன் சவாலாகத் தோன்றியதெல்லாம்
உனக்கு சாமரம் வீசி நிற்கும்
வருங்கால வெற்றிக்கு வழியும் காட்டும் !
சாதிக்கும் துணிவு வந்துவிட்டால்
உனக்கு காற்றுக்கூட வாகனமாகும்
வெற்றியுடன் உலகை வலம் வரலாம் !!