மனமொரு பறக்கும் காகிதம்...

வெள்ளைத் தாளொன்று கண்டேன்
==வீட்டின் வாயில் பிறக்குமிடத்தில்,
அள்ளக் குறையா சோகந்தன்னில்
==அண்ட இடம் துளியும் இல்லாது,
சொல்லப் புரியா மௌனந்தன்னில்
==சொல்லிலடங்கா சிந்தையோடு,
மெல்லப் பறந்தெழுந்தது மேலே
==மெல்லிய காற்றில் முதலே..

வேகம் சற்று கூட
==வீதியெல்லாம் அது விரைந்திடவே,
சோகம் கண்களை மறைக்க
==காற்றின் சொல்லுக்குப் பணிந்ததே,
(சுக)போகம் கண்ட நாட்களில்
==சுமைகள் பற்றி எண்ணவில்லை,
தேகம் பாழ்பட்டுப் போனதின்று
==திமிரும் காற்றின் உதைகள் பட்டு..,

அலைந்து திரிந்து அடங்கிப் போக
==அங்குமிங்கும் உலவிட்டதே,
வளைந்து நெளிந்து கசங்கிப் போய்
==விரைந்து சுழன்று அடிபட்டதே,
குழைந்து குறுகி குமுறிட்டு
==களத்தில் போர் கண்டதே,
கலைந்து சிதைந்து கரிபட்டு
==காற்றின் அடிமையானதே..

தன்னிலை புரியாது
==வளியின் தந்திரத்தில் ஆட,
இந்நிலை நில்லாது
==இதன் வாழ்க்கை இப்படியே ஓட,
தன்பிழை எதுவென்ற தெளிவு
==அதன் பிறப்பினிலேயே மால,
முன்னிலை தொடங்கும் முன்னே
==முடிவுரைக்கான காரணமென்னவோ..

அலையும் இவன்(மனிதன்) மனமோ
==அடங்கிப் போனதில்லை என்றும்,
தொலைதூர இச்சைகள் கண்டு
==தன் தோற்றம் தொலைத்துப் போவதேனோ,
தன் நிலை பாடும் வளிக் காகிதம்
==நெருடல்கள் பலவற்றைப் பார்த்திட,
பிழையோடு பிறந்த மனத்தை
==பழி நீக்கி, அலைவதைத் தடுப்பானோ..!!!!

எழுதியவர் : பிரதீப் (9-Jun-13, 8:31 am)
பார்வை : 118

மேலே