முரண்

நாற்றாக இருந்தபோது
நனைக்க வராத மழை
காயவைத்த நெல்மீது
கவனமாகப் பெய்கிறது!

புழுக்கத்தின்போது புறக்கணித்த காற்று
தாவணிப் பெண்களைக் கடக்கையில்
தவறாமல் தலை கலைக்கிறது!

பொங்கும் பாலில் விழுந்தும்
பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம்
அழகுப் பெண்கள் மணி கேட்கையில்
அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது!

அமாவாசையன்று சோறு வைத்து
அழைத்தபோது வராத காகம்
ஆயிரம்பேர் பார்கையில் வந்து
ஆடைமேல் எச்சமிடுகிறது!

மாதாமாதம் நடக்கும் திருட்டின்போது
மருந்துக்கும் வாய்திறவாத நாய்கள்,
கூர்க்கா வந்துபோகும்போது
குலை நடுங்கக் குறைக்கின்றன!

அழுக்குச் சட்டை போட்டு நடக்கையில்
அமைதியாய் கடக்கும் வாகனங்கள்
வெள்ளைச்சட்டை போடும் நாட்களில்
வேகமாய் வந்து சேறடிக்கின்றன!

விடுமுறை நாட்களில்
விடிய விடிய வராத உறக்கம்
பரீட்சை நாட்களில்
பத்து மணிக்கு முன்னரே
வந்துவிடுகிறது!

படிக்கும்போது பலருக்கும்
விளக்கிய விடைகள்
பரீட்சையின்போது
பாதியில் மறக்கிறது!

நேர்முகத் தேர்வில்
கோர்வையாக வராத ஆங்கிலம்
மது விருந்தின்போது
மட மடவென வருகிறது!

காகிதம் பேனாவோடு
கடற்கரையில் அமர்ந்தபோது
வராத கவிதை
கட்டணக் கழிப்பறையில்
கட கடவென வருகிறது!

எண்ணையில் நனைத்த எருவானாலும்
ஏழாவது தீக்குச்சியில்
பற்றும் நெருப்பு
ஏழையின் கூரையில் மட்டும்
எளிதில் பற்றிவிடுகிறது!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Jun-13, 11:59 am)
பார்வை : 107

மேலே