ஊரோடு ஒத்து வாழ்!

தாயின் கருவறையில்
கருவாய் நான் இருக்கையிலே,
தொப்புள் கொடித் தொடர்பில்,
தாயின் அறிவுரைகள்!

எப்பாடு பட்டாகிலும்
ஆணாய்ப் பிறந்துவிடு,
பெண்ணாய் நீ பிறந்தாய் எனில்
கள்ளிப் பால் காத்திருக்கு!

இப்படியும் செய்வார்களா?
இது என்ன சாபக் கேடா?
உள்ளூர பயந்து கொண்டே,
ஒருவாறு பிறந்தேன் ஆணாய்!

பாலூட்டும் போதினிலே ,உலக
பயத்தினையும் சேர்த்து ஊட்டி,
பூச்சாண்டி காட்டி என்னைக்
காப்பாற்றி வளர்த்து வந்தாள்!

கண்ணுக்குத் தெரியாத்
கடவுளரின் கதைகளையும்,
விண்ணுக்கும் ,மண்ணுக்குமாய்
நிற்கின்ற பேய்களையும்

அன்னத்தோடு அன்னமாய்
அறிமுகம் செய்து வைத்தாள்!
வீரத்தை ஊட்ட விரும்பிய எந்தை
விவாதங்கள் செய்து ஓய்ந்தார்!

பயத்துடனே பள்ளி சென்றேன்.
படிப்பினில் கவனம் கொண்டேன்.
உடன் படிக்கும் நண்பரெல்லாம் ,
ஓடியாடி விளையாடுகையில்,

ஒதுங்கி நின்றே நான் படித்தேன்.
விளையாடச் சென்றால் உடலில்
அடிபட்டுவிடும் என்ற
அன்னையின் அறிவுரையால்!

படிப்பினில் நான் முதலாக
இருந்திட்ட காரணத்தால்
பயந்து விட்ட நண்பர்களோ
பதுங்கினர் எனைக் கண்டு!

சின்னச் சின்னக் குறும்பு செய்ய,
சிலநேரம் ஆசை வரும்!அடுத்தவர்
எண்ணத்தில் கெட்டவனாய்த்
தெரியுமென அடக்கிக் கொண்டேன்!

வண்ணமாய் நான் வளர்ந்து
கல்லூரி செல்லுகையில்
வான வில்லாய் மங்கையர்கள்
கனவுலகில் சஞ்சரித்தார்!

அழகான பெண்களிடம்
அரட்டைகள் அடித்திடவே
எனக்கும்தான் ஆசை வரும்,
என்றாலும் அடக்கி வைத்தேன்!

என்ன பையன்? இவனென்று
நண்பர்களும் ஒதுக்கி வைக்கத்
தனியாளாய்ப் படிப்ப தனை
எப்படியோ முடித்து விட்டேன்!

எத்தனையோ அறிவுரைகள்
எடுத்துச் சொன்ன என் அன்னை ,
"ஊரோடு ஒத்து வாழ்"
என்று சொல்ல மறந்து விட்டார்!

ஊரில் உள்ள அனைவருமே
ஒற்றுமையாய் இருக்கையிலே
ஆடையணிந்த ஊரில்,
அம்மணமாய் நான் மட்டும்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (16-Jun-13, 7:26 am)
பார்வை : 241

மேலே