படாத பாடு படும் பண்பாடுகள்

வரிசையில் நின்றே இடம்
வாங்கி கொடுக்கப்படுகிறது
அப்பா அம்மாவுக்கு
முதியோர் இல்லத்தில்

இப்போதும்
வேலை எளிதாய்
கிடைத்து விடுகிறது
குழந்தை தொழிலாளர்களுக்கு

எல்லோர் தமிழ்
வீட்டு பிள்ளைகளும்
எளிதாய் பேசுகின்றனர்
ஆங்கிலத்தில்..சரளமாய்

படம் பார்த்து
கற்றுக் கொடுக்கப்படுகிறது
மாட்டு வண்டியும்
மிதி வண்டியும்

பச்சிளங்குழந்தைகளின்
முத்தங்கள் மொத்தமாய்
நித்தமும் கிடைக்கிறது
ஆயாக்களுக்கு


மடிக்கணினிகள்
மறைத்துவிட்டன
தாத்தா பாட்டிகளின்
கதைகளையும் நிலாச்சோறையும்


மன ஆறுதலான பொழுதுபோக்கும்
மாறி விட்டது சூதாட்டமாய்
பல நிமிட விளம்பரத்துக்கிடையே
சில நிமிட விளையாட்டுக்களில்

நானிலம் எட்டுத்திக்கும்
கூறுபோடப்படுகின்றன
கட்டுக்கட்டான பணத்திற்காய்
ரியல் எஸ்டேட்-காரர்களால்

ஓடாத ஆற்றிற்கு
ஒன்பது அணைக்கட்டுக்கள்
குறுக்கே நிற்கின்றன
சாக்கடை அரசியல்களால்

கட்டிக்காத்த கௌரவத்தை
கைகூடி வருமுன்னே
கொ(கெ)டுத்து விடுகிறார்கள்
லஞ்சமும் ஊழலுமாய்

கிழிந்த ஆடைகளுக்கு
பலத்த கைதட்டுகளாய்
பயணிக்கிறது இன்னுமாய்
வண்ணமிகு சினிமாக்கள்..

மக்கள் பரிதவித்து
மீண்டும் ஒரு
'குடியரசு'கேட்கிறார்கள்
குடிகாரர்களிடம்..

தொடர்ந்தது..தொடர்கிறது..
தொடரும் ..இன்னுமாய்
முடிக்காத...முடியாத..
நீதிமன்ற வழக்குகள்

ஒற்றையடி பாதையில்
கிடைத்த மர நிழலில்
ஓய்விடுத்துக் கொள்கிறது
நியாயமும் நேர்மையும் .

.............................................................

என் படைப்பினை

பொறுமையாய் படித்த உஙகளுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்..

நெல்லை பாரதி

எழுதியவர் : நெல்லை பாரதி (17-Jun-13, 7:10 pm)
பார்வை : 102

மேலே