தேடலும் தெரிதலும்
பரந்து கிடக்கும்
உலகில் உனக்குப்
புரியாமல்இருப்பவை பல
தேடிக்கொண்டே இரு
தெளிவு கிடைக்கும்.
தேடலில் வருவது
அதிகம்-ஆனால்
தெரிவில் கிடைப்பது
சொற்பமே!
தெரிவில் கிடைப்பதை
உன் அறிவைக்
கொண்டு ஆய்வு செய்
அதன் பெயர் அறிவியல்!
உன் சக்திக்கு மேலான
ஒன்று உலகில் உண்டு-அதை
கடவுள் என நம்பு
அதுதான் ஆன்மிகம்!
ஆய்வுகளும்
விளக்கங்களும்
ஆன்மீகத்தில் இருந்து
அப்பாற்பட்டு நிற்கட்டும்.
பகுத்தறிதலையும்
பக்தியையும் முரண்பட்டு
மோதவிடாது ஒன்றாக
உன்னோடு பயணிக்க விடு.
ஆன்மீகத்தில் ஆங்காங்கே
முளைத்துக் கிடக்கும்
மூட நம்பிக்கை
களைகளை
அறிவியலால் கிள்ளி எறி!
உலகுக்காக
வாழ்வை மாற்றுவது
அறிவியல்!
வாழ்வுக்காக
உலகை மாற்றுவது
ஆன்மிகம்!
பிரபஞ்சத்தை
வாழ்வுக்காக
வளைத்துக்
கொள்ளும் அறிவியலுக்கு
கட்டுப்பாடு வை!
கட்டுப்பாட்டை மீறும்
அறிவியலால்
ஒட்டு மொத்த உலக
அழிவை உருவாக்கி
பழியை கடவுள்
தலையில் போடாதே!
உத்தர கண்டத்தை
எச்சரித்த அனர்த்தங்களும்
ஊதாமல் வெளியேறும்
அணு உலைக் கசிவுகளும்
அறிவியலின் அறியாமையே.
முரண் படும்
மதப் பிரிவுகளையும்
முடிவில்லா
யுத்தங்களையும்
ஆன்மிகம்உருவாக்கவில்லை!
தேடுதல் தெரிதல்
புரிதல் தெளிதல்
மனித மனம் உணரும்
யதார்த்தமான போதனைகள்!
ஆன்மீகக் கண்களை மூடி
அறிவியல் கைகளால்
எதையும் சாதிக்க முடியும்
என்றால் உன் இலக்கு என்றும்
கேள்விக்குறியே!