வாழ்க்கை வரிகள்
உங்கள் வாழ்க்கை பயணம்
எந்த வார்த்தை வழியே
நடக்கிறது?
"எப்படியாவது" என்றால்
அது
நீங்களே வகுத்த பாதை.
பலர் மனம் வருந்த
பயணிக்கிறீர்கள்.
இடையிலோ முடிவிலோ
நிம்மதியும் மகிழ்ச்சியும்
தொலைவது உறுதி.
"இப்படித்தான்" என்றால்
அது ஒருவழிப்பாதை.
தனிப்பயணம்.
துணை வருவது கடினம்.
இழப்பது பலவாயினும்
பெறுவது வறட்டு திருப்தி.
"விதி வழி" என்றால்
அது உங்கள் பயணமல்ல.
காற்றில் அலையும்
சருகாக
நதியில் மிதக்கும்
இலையாக
தன்னிச்சையின்றி
நிகழும் பயணம்.
முடிவைத் துரத்தும்
முயற்சிகளின்றி
கடமைக்காகவே காரியம்
செய்வீர்.
இங்கே
பலர் வாழ்க்கையும்
"எப்படியாவது"
தொடங்கி நடந்து
"இப்படித் தான்"
இல்லையோ என்று
இடையில் வருத்தமுற்று
"விதி வழி"
முடிவதுவே விந்தை.