என் ஜீவன் வாடுது

அந்த மதிய வெயிலில் வேர்த்துக் கிடந்த காம்பவுன்ட்டுக்குள் பூத்து கிடந்தது, போஸ்ட் மேன் போட்டு விட்டு போன கவர்......செல் போனும், இன்டர்நெட்டும் வளர்ந்ததற்கு நாம் கொடுத்த விலை இந்த மாதிரி கவர்களும், கடிதங்களும் தான்....பக்கம் பக்கமாக காதலை எழுதி, அஞ்சல்காரனை தூது அனுப்பிய காதலர்கள் வாழ்ந்த பூமியில் ஒற்றை வரியின் அலைகளை நொடிகளின் கடத்தும், காற்றும் காலமும், வரங்களாகி போனது....பச்சை மரத்தில் மஞ்சள் பூக்கள் போல, முரண்களின் நகங்களில் எப்போதும் பூத்து நிற்கிறது கீறல்....

அப்படி என்னதான் அந்த கவரில் இருக்கிறது...... அதை பிரித்துப் பார்க்கப் போகிறவன் மாலையில் வருவானோ... அல்லது இரவில் வருவானோ... அல்லது நள்ளிரவில் வருவானோ.... உழைத்தே பிழைப்பாய்... நெற்றி வியர்வை நிலத்தில் வீழ- பைபிளின் கூற்றுக்கு உதாரணமாகிப் போனவன் ராமகிருஷ்ணன்..... சுருக்கமாக ராம்கி....

அவன் வரும் வரை, கவருக்குள் ஒளிந்து கிடப்பது, ஒளித்திருப்பது மட்டுமல்ல என்பதை மனம் யூகிக்கிறது........ சில சமயங்களில் சரியான யூகம் கூட தவறு தான்.... விடை கிடைக்காத வரையே கேள்வி சுகம்...... சுமந்து கிடப்பதன் சுகம் சுமங்கலியிடம் கேளுங்கள்.....மதிய வெயிலில் சுழன்று கொண்டிருப்பது வெக்கையும் வியர்வையும் மட்டுமல்ல....... கூடவே ராம்கியின் போன மாத சிந்தையூர் ட்ரிப்பும் தான்.....

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த அதிகாலையில் பளீரென சிரித்தது அவனின் அலைபேசி.... அலைபேசியில் அழைத்தவன் கொஞ்ச நேரம் அழைக்களித்தான். அடாவடியாக பேசினான். அவன் இவன் என ஒருமையில் விளித்தான்.... ராம்கியின் முகம் கடுப்பாகி, வார்த்தைகளில் தெறிக்க ஆரம்பிக்க...

டே.... வெங்காயம்..... நான் பொன்னுசாமிடா.....
தொடர்ந்து கத்திய ராம்கி, கடந்து விட்ட மைல்கல்லில் பதிந்து கிடக்கும் எண்களை சட்டென ஒரு கணத்தில், மூளையில் நிறுத்தி கண்டு பிடிப்பது போல, கண்டே பிடித்து விட்டான்....சில நொடிகளில் மௌனம் விதைத்தவன், ஏங்கிய பெருமூச்சுக்குப் பின்....... ஒ வென கதறும் அழுகையை போல...... டே ... பொன்சு ........... என கத்தினான்......

ஆமாண்டா..... பொன்சே தான்...........................

பரஸ்பர விசாரிப்புகள், செல்போனின் அலை வரிசை காற்றில் கட்டித் தழுவி கிடந்தன......கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் பொன்ஸ் பேசுகிறான்..... வரும் ஞாயிறு அன்று சிந்தையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நண்பர்கள் அனைவரும் சந்திப்பதாக திட்டம்.....

ஆமாண்டா.. நம்ம ராஜா தான் பிளான் பண்ணான்..... ஒவ்வொருத்தரா புடிச்சோம்....ஒவ்வொருத்தர் மூலமா ஒவ்வொருத்தரையும் புடிச்சோம்....உன் நம்பரை நம்ம மணிமேகலை குடுத்தா.... அவள அமெரிக்கால பாத்தயாம்...... அவளும் வர்றா..... கிட்டத்தட்ட நம்ம கிளாஸ்ல படிச்ச எல்லாருமே வர்றேன்னு சொல்லிட்டாங்க... வந்துர்டா......

அவன் அலைபேசியை அணைத்த பின்னும் மனம் பேசிக் கொண்டுதான் இருந்தது..... காலண்டரை வேக வேகமாய் கிழித்து ஞாயிறை தொட்டான்......அந்த ஒரு நாள், முப்பது வருடங்களை தள்ளாடி சுமந்து சென்று கொண்டிருந்தது ராம்கியின் காரில்.....

ஊரும் சாலையும் வேறாக தெரிந்தது ..... பாட்டி, தாத்தா இறந்த பின் சிந்தையூருடனான உறவே இல்லாமல் போக, அந்த இல்லாமை முப்பது வருடங்களாக தன்னை நீட்டித்துக் கொண்டே போய்விட்டது.. எத்தனை வயதை கொட்டினாலும் அந்த பதினெட்டு வயது திரும்ப போவதேயில்லை... எதைப் பற்றியும் கவலை இல்லாத காலம்... வரும் மழையும் வந்த வெயிலும் தனக்காகவே என்பதான குதூகலத்தில், ஒவ்வொரு நாளும் பூத்துக் குலுங்கும் வகுப்பறை.... வானவில்களாய் தோழிகள்.... வரம் பெற்றவர்களாய் இவர்கள்...... மனம் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது, பிரிந்த போது சிந்திய கண்ணீர் துளிகளாய் ....

ராம்கியின் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது..... சொல்ல இயலாத சொல்லாடலை மௌனம் திருடிக் கொண்ட நொடிகள் அவை....இதோ இன்னும் சில மணித்துளிகளில் பள்ளிக்குள் நுழைந்து விடுவான்.. பள்ளி வாயிலில் எத்தனையோ மாற்றம்.. இது, தான் படித்த பள்ளிதானா.... கால மாற்றம் என்பது கட்டிட மாற்றம் தானா..?

உள்ளே சில கார்கள், பைக்குகள் பார்க் செய்யப் பட்டிருக்க, இவனும் அதனருகில் வண்டியை பார்க் செய்து விட்டு நடக்க ஆரம்பித்தான்... அவன் கண்கள் கலங்குவதை அவனால் தடுக்க இயலவில்லை......

இது ஹெட்மாஸ்டர் ரூம்..... பக்கத்துல பனிரெண்டாவது ஹிஸ்டரி கிளாஸ்........ பக்கத்துல சயின்ஸ், அதுக்கடுத்து கலா மன்றம்....... இந்த பக்கம் ஆறாம் வகுப்பு சி கிளாஸ்........

முதன் முதலில் இந்த பள்ளியில்.....சேர்ந்து,ஆறாம் வகுப்பில் நுழைந்த காட்சி அவனின் மனக் கண்ணில் கத்தியது.... அங்கே தெரியும் கட்டிடம் எட்டாவது சி கிளாஸ்..... அதுக்கு பக்கத்துல பத்தாவது பி...வகுப்பறைக்கு முன்னால் ஒரு நாள் பட்டாசு வெடித்து, மதியம் வரை வெயிலில் முட்டி போட்டு நின்றது... நினைவில் அமர்ந்தது... இதழ் மெல்ல புன்னகைத்தது....பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது..... ராம்கி நெருங்கி விட்டான்..... பன்னிரெண்டாம் வகுப்பு ஒ. எஸ். எஸ். பிரிவில் தான் நண்பர்கள் கூடியிருக்கிறார்கள் என்பது புரிந்து, மெல்ல வாசல் அருகே நடக்கலானான்.... மனதுக்குள் இனம் புரியாத பந்தொன்று ஓடிக் கொண்டிருந்தது... திரும்பி போய் விடலாமா என்று கூட ஒரு எண்ணம்.. தலை சிலுப்பி நின்றது. யார் யாரெல்லாம் வந்திருப்பார்கள்..? எல்லாரும்...! என்றால் அவளும் வந்திருப்பாள் தானே..... அவனால், பார்வையை, மனதை, உடலை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.. கண்டிப்பாக அழுது விடக் கூடாது என்று, கணத்தில் முடிவெடுத்து வகுப்புக்குள் நுழைய, அதுவரை பேசிக் கொண்டிருந்த பழைய மாணவர் கூட்டம் சட்டென அமைதியாகி உற்றுப் பார்த்தது.... உள்ளே நுழைந்த ராம்கி, உறைந்து நின்றான். முதலில் எழுந்து வந்தவன் தெய்வா.. பார்த்துக் கொண்டே வந்தான். அருகில் வந்து உற்றுப் பார்த்தவன்....
ரா.... ம்... கி... ................................
என்று கட்டியணைக்க, ஆரம்பித்திலேயே, அழ நேரிட்டு விட்டது.. எத்தனை அடக்கியும் முடியவில்லை...
ராம்கி, தெய்வாவின் தலைய பார்க்க,...... இன்னும் அப்பிடியேவா இருக்கும்.. எல்லாம் போச்சு மாப்ள என்றான்..
சிரிக்கத தொடங்கியது கூட்டம்....

உனக்குந்தான் தொப்பை இவ்ளோ வந்துருச்சு..... என்றவன் ,ஆமா..... மச்சான், அது யாருன்னு தெரியுதா.. என்று ஒரு பெண்ணைப் பார்த்து கேட்க, இவன் உற்றுப் பார்த்து, பின் ஒருவித சந்தேகத்தோடு.... கூறினான்...

டே...................... இது சிவகாமி தான.....

ஆம்... சிவகாமி, பாட்டியாகிருந்தாள் .... முன் நெற்றி மறைத்து கிடந்த முடிகள் இல்லை..... வலது புற நெற்றி நேரில் விளைந்து கிடந்த வெண்மையில் வயதின் வெள்ளாமை இறைந்து கிடந்தது. படிக்கும் காலத்தில் எந்தெந்த இடத்தில் அமர்வார்களோ.. அதே போல், அன்றும் அமர்ந்திருந்தார்கள். ராம்கி, அவன் இடத்தில் அமர்ந்தான். மனதுக்குள் இனம் புரியாத பயம், மரணத்தின் மீதான வெளிப்பாட்டை சுமந்த படியே உருண்டு கொண்டு கிடந்தது ..கணங்களில் அன்றைய நாட்கள் கருப்பு வெள்ளை காட்சிகளாய் அரங்கேறின.. அனிச்சை செயலாய் இடதுபுறம் திரும்பி பரிமளாவின் இருக்கையை பார்த்தான்... அது காலியாக இருந்தது.....மனதுக்குள் கேள்வி, விழிகளில் தேடல், யாரிடம் கேட்பது... முப்பது வருடங்களுக்குப் பின் இப்படி ஒரு சந்திப்பு. அவளையும் பார்த்துவிட்டால் இன்னும் கொஞ்சம் அமைதி கிடைக்குமே ..எண்ணங்களில் தவிப்பு சூடாய் தவழ்ந்தது...

ராம்கி, இன்னும் இன்னும் ஆழமாய் பரிமளாவின் இருக்கையை ஆழமாய், அழுத்தமாய், பாவமாய், பரிதவிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. கேட்டு விடலாம்... இவர்கள் அனைவருக்கும் பரிமளாவுடனான உறவு
தெரியுந்தானே ...அவள் ஏன் வரவில்லை? அவன் கேட்க முடிவெடுத்து, அருகில் அமர்ந்திருந்த லட்சுமிகாந்தனிடம் கேட்க முயல......
அதற்குள் கூட்டத்தை ஒருங்கிணைத்த பொன்ஸ் பேச ஆரம்பித்தான்.....

நண்பர்களே, இத்தனை வருடங்களுக்கு பின் இப்படி ஒருசந்திப்பை என்னால் நம்பவே முடியவில்லை.. ஆனால் இது சாத்தியமாகி இருக்கிறது.. இருந்தும் சில பேரால், குமார் ஜெயச்சந்திரன், புவனேஸ்வரி, பரிமளா, பார்வதி, பூங்கொடி, இவர்களால் வர முடியவில்லை.... என்று செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

பரிமளா ஏன் வரவில்லை.. நான் வருவென்று வரவில்லையா..... ஒவ்வொரு முறையும் புது பார்வை தந்தவள் ஒரு முறை பார்க்க வந்திருக்கலாமே..ராம்கியால் பரிமளாவை கடந்து வர முடியவில்லை.... தத்தளிக்கும் படகில் விழுந்த ஒரு துளி மழை நீரை எங்கே தேடுவது...
தெய்வா எதையோ சொல்ல, எழ முயற்சிக்க பொன்ஸ் கண்ணைக் காட்டி, உட்கார வைத்தான்...

எல்லாருமே ஏதோதோ சிந்தனைக்குள் தங்களை அமிழ்த்திக் கொண்டிருந்தார்கள்.. பேச்சுகளற்ற மௌனத்தில் கடந்த காலத்தை தேடிக் கொண்டிருந்தார்கள்.....

எத்தனையோ கனவுகளோடு பிரிந்து சென்றவர்கள், முப்பது வருடங்களுக்குப் பின் இங்கே கூடியிருக்கிறோம்... கண்ட கனவுகள் கை கூடியதோ இல்லையோ, ஆனால் இன்று ஏதோ சாதித்த பெருமை, நிரைந்து வழியும் மனம்...போதும் என்ற திருப்தி.... நமக்குள் இழையோடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.. இனி அடுத்து ஒரு சந்திப்பு, இதே போல் சாத்தியமா... ?யார் யார் எத்தனை வருடம் உயிரோடு இருக்க போகிறோமோ.....அதற்கு மேல் பொன்னுசாமியினால் பேச முடியவில்லை.....

அழுது விட்டான்....எழுந்து சென்ற மணிமேகலை, அவனை தழுவிக் கொண்டாள்.. எத்தனை தேடினாலும் திரும்ப கிடைக்கவே முடியாத பதின் பருவத்துக்குள் பொன்ஸின் கண்ணீர் மழையாகி கொண்டிருந்தது.. அலைபேசி, மின் அஞ்சல் முகவரிகள் இடம் மாறி அவரவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்... பிரியவே முடியாத பாதைகளாய் ....

கண்களை துடைத்தபடியே காரில் ஏறி சென்றான் ராம்கி.....அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பொன்ஸ், தெய்வாவிடம் நல்ல வேளை தெய்வா .... நீ சொல்லிருவியோன்னு பயந்துட்டேன், அதான் கண்ணக் காட்டி உட்கார சொன்னேன் என்றான். அப்போ அவனுக்கு சொல்லவே வேண்டாங்கரியா என்றான் தெய்வா....
நாம சொல்ல வேண்டாம், அவனுக்கா தெரிஞ்சா தெரியட்டும் என்றான் பொன்ஸ்.....

வெயிலை சுமந்து கிடந்த கவர், இப்போது இரவையும் இரவின் குளுமையையும், பழைய நினைவையும் சுமந்து கிடந்தது... காம்பவுண்டுக்குள் நுழைந்த ராம்கியின் கண்ணில் கவர் பட... கணத்தில் புரிந்து கொண்டான்... அத்தனை பேரையும் ஆரத் தழுவி, கிளம்ப எத்தனிக்கையில் அனைவரும் நின்று எடுத்துக் கொண்ட குருப் போட்டோ தான் என்று....

எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று அவசர அவசரமாக கவரைப் பிரித்தான்...இளமை நினைவுகளை சேகரித்து தேக்கி வைத்த பொக்கிஷமாய் விரிந்தது அந்த புகைப்படம்...ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வந்தவனின் விழிகள் வியர்த்து விரிந்தது.....கடைசியாக நின்ற தன் அருகே சிவப்பு தாவணியில் பதினெட்டு வயது பரிமளா நின்று கொண்டிருந்தாள்..

ஆம்..... இவர்கள் பன்னிரெண்டாவது முடித்த மூன்றாம் மாதத்தில் ஒரு ரயில் விபத்தில் பரிமளா இறந்து விட்டிருந்தாள் ....

எழுதியவர் : கவிஜி (26-Jun-13, 10:31 am)
பார்வை : 285

மேலே