என்னை மறந்தது ஏனோ

காலைக் கதிரவனுடன்
நடந்திட நினைத்தேன்
காலணிகள் அறுந்து
கவலை தந்தது
.
ஓடும் பேருந்தில்
ஒய்யாரமாய் ஏறி
அலுங்காமல் வீடு
திரும்பிட எண்ணிட
சட்டைப் பையில்
காசில்லை என்பது
கைவிட்டுப் பார்த்த
பின்தான் புரிந்தது

சாவுகிராக்கிப் பட்டம்
செலவின்றிப் பெற்று
அடுத்த நிறுத்தத்தில்
படக்கென்று குதித்தேன்
ஏறவந்த மனிதரின்
தாடையில் அடிபட
”தடியன், குருடன்”
தனிப்பட்டு நின்றேன்.

யார் முகத்தில்
விழித்தேன் இன்று
ஊர் முழுவதும்
கரித்துக் கொட்டுதே
மனைவி ஊரில்
இல்லை என்பதால்
என்முகம் தானே
பிம்பமாய் தெரிந்தது.

விடியா மூஞ்சியென
அப்பன் அன்று
சொன்ன சொல்லே
நினைவு வந்தது.

வந்தவழி விட்டு
திரும்பி நடக்க
சாலை ஓரத்தில்
நிறுத்தி இருந்த
இரண்டு சக்கர
வாகனம் எனது
என்னை மறந்தது
ஏனோ என்றது.
.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (27-Jun-13, 2:59 pm)
பார்வை : 226

மேலே