போராளியின் வெற்றி சலனம் -ஜான்சி ராணி லட்சுமி பாய்

பெண்ணாய் பிறப்பதே பாவம்தான்
அவளுக்கு நேரும் சங்கடங்களுக்கு
எல்லையே கிடையாது

அவளுக்கு அநிதி செய்யும்
ஆண்கள் இன்னும் அப்படியே
ஆட்டம் போட்டு கொண்டுதான்
அலைகிறார்கள் அமிலம் ஊற்றுவதும்
ஆடை கலைத்து மானபங்கம் செய்வதுமாய்

பெண் பிறந்தால் கள்ளி பால் கொடுப்பதும்
குப்பை தொட்டியில் தூக்கி எறிவதும்
இன்றும் வழக்கத்தில் உள்ள செயலாக
இருக்கிறது இந்தியாவில்

இப்படி எத்தனை பேர் புலம்புகிறோம்
அப்படி புலம்பியே பதுங்கும் பெண்களே .....
துணிச்சல் துளியும் இல்லாமல் வெளிவேஷம்
போடும் 23ஆம் புலிகேசி ஆண்களே ......

இதோ மணிகர்ணிகாவாக பிறப்பெடுத்து
பின் ஜான்சி ராணியாக உருவெடுத்த
இந்திய பெண்ணை பற்றியும்
இனி உங்கள் வாய் புலம்பட்டும்

வீரத்துக்கு முக்கியம் தைரியமும்
எதையும் சந்திக்கும் துணிவும்
போருக்கு முன்னால் பொங்கிடாத
உள்ளமும் ,ஊற்றெடுக்கும் ஆற்றலும்தான் !!!!

ஆண்-பெண் என்ற பாலின பாகுபாடு
அல்ல என்பதை ஆணித்தரமாக
அனைவருக்கும் தனது வாழ்கையின்
அனுபவத்திலிருந்து தந்தவள் !!!!

18ஆம் வயதில் விதவையானால்
விசனபடும் பெண்களுக்கு மத்தியில்
வாளை ஏந்தி போர் முனைக்கு
வெற்றி நடை போட்டவள் ......

தனது வயிற்றில் உதித்த ஆண்
குழந்தை பிறந்த நான்கு மாதத்தில்
இறக்கிறது "வாரிசு இல்லாத ராஜ்ஜியம்
என்பதால் ஜான்சி தேசத்தை உங்கள்
கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ண
வேண்டாம் "என்று துணிச்சலோடு
ஆங்கிலேய தளபதிக்கு பதில் சொல்கிறாள் !!!!!

பெண்ணை ஒரு ஆண் தனது
கட்டுபாட்டுக்குள் வைக்க
விரும்பினால் வெடவெடுத்து
விழுந்திடும் சில பெண்களே ......

சற்று இவளை உற்று நோக்குங்கள் .......

ஜான்சி எனும் நாட்டை சொந்தம்
கொண்டாட நினைத்த ஒவ்வொரு
ஆங்கிலயேன் தலையையும் வெட்டி வீழ்த்தி
தனது நாட்டு மக்களையே காத்து நின்ற
பெண்ணின போராளி இவள் !!!!

விழுந்து உருண்ட தலைகள் ஒன்றும்
வாளேந்தி மட்டும் வரவில்லை -கூடவே
வானகாற்றை கிழித்து பாயும்
பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும்
கையில் ஏந்தி வந்தனர் !!!!!

வீறுகொண்ட பெண்சிங்கமென
கர்ஜித்த இவளின் சத்தத்தை
கேட்டு, விழுந்து அடித்து ஓடியது
ஆங்கில ஓநாய்களின் கூட்டம் !!!!

வளர்ப்பு குழந்தையை தனது
முதுகில் கட்டிக்கொண்டு ஒற்றை
ஆளாக ஆங்கிலேயர் பிடியில் அகபட்டபின்
போராடி தப்பித்தவள் !!!!

ஆங்கில படை தலைவன் ஹீ ரோஸ்
என்பவன் இவளின் தைரியத்தை
பார்த்து கூறுகிறான் புரட்சி தலைவர்களில்
இவள் மிகவும் ஆபத்தானவள் என்று !!!!

ஆம் ,பெண்கள் மனதில் அடிமைத்தனம்
இல்லாத கண்ணீர் சிந்தினால்
அவர்கள் ஆபத்தானவர்கள்தான்

ஆம் ,ஆட்டுவிக்க நினைக்கும்
ஆண்களை எதிர்க்க நினைத்தால்
அவர்கள் ஆபத்தானவர்கள்தான்

ஆம் ,தன் கருப்பையின் சிசுவிற்கு
நேர்மையையும் துணிச்சலையும்
ஊட்டினால் அவர்கள் ஆபத்தானவர்கள்தான்

போர் முனையில் ரத்தம் சிந்தி
முதல் விடுதலை போரில்
வீர முழக்கமிட்டு மாண்ட
இவளின் ரத்தத்தில் ஜனித்தவர்கள்தான்
காந்தியும் -சுபாஷும் ,மற்ற
சுதந்திர போராளிகளும் ,இதனை
இந்தியா மறந்திட வேண்டாம் !!!!!

அவளுக்கு தலைநகரத்தில்
கல்சிலை வைப்பதோடு
நின்றிட வேண்டாம் !!!!

இந்தியாவின் தலையெழுத்து
உணர்ச்சியின் உச்சியில் கொட்டும்
ஆணின் விந்தில் இல்லை ;
பாசத்தையும் -நேசத்தையும்
பண்பையும் -அன்பையும்
அறிவையும் -வீரத்தையும்
தனது ரத்தத்தில் கொட்டி வளர்க்கும்
பெண்ணின் கருப்பையில்தான்
இருக்கிறது!!!!

இவளின் போராட்ட சலனத்தை
அன்றே சுபாஷ் "ஜான்சி ராணி"
இயக்கமாக தோற்றுவித்து
இந்திய பெண்களின் வீரத்தை தட்டி எழுப்பினார்!!!!

இவள் வீரவசனங்கள் பேசியதில்லை-ஆனால்
மெளனமாக வீரத்தை வெளிபடுத்தினால்

இவள் வாழ்கையிழும் துன்பங்கள் உண்டு -ஆனால்
துணிச்சலோடு அதனை எதிர்கொண்டால்

இவள் புரட்சி ஏற்படுத்த போராடவில்லை -ஆனால்
இவளின் செயல்கள் அனைத்தும் புரட்சிகரமானது

இவள் போரில் சிந்திய வீர ரத்தம் -இன்னும் பச்சையாக பல பெண் போராளிகளை இந்தியாவில்
உருவாக்க காத்துகொண்டிருக்கிறது முழுதாக
பெண் சுதந்திரம் பரவும் வரை காத்துகொண்டிருக்கும்!!!!!

****************************************************************************
என்றென்றும்
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (30-Jun-13, 2:17 pm)
பார்வை : 5980

மேலே