அனாதைகள்

அன்பாய் கவனிக்க அன்னையுமில்லை
அக்கறையோடு காத்திருக்க தந்தையுமில்லை
உரிமையோடு சேர்த்துக்கொள்ளஉறவுகளுமில்லை
ஒருத்தருமில்லாததால் நாங்கள்அனாதையாய் ......

வீடு வாசல் எங்களுக்கில்லை
வீதியே எங்கள் எல்லை
பெற்றவர்கள் செய்த தவறுகளாலே
பிள்ளைகள் நாங்கள் அனாதையானோம் ..........

கந்தலே எங்கள் மானம் காக்கும்
குப்பைகளே எங்களுக்கு சோறு போடும்
வீதி கட்டைகள் மெத்தைகள் ஆகும்
மீதி உணவே எங்களின் வயிற்றை நிரப்பும்.............

பெற்றவள் கருணை வற்றிப்போக
குப்பைதொட்டியே என்னை வளர்த்த தாய்
தெரு நாய்களோடு சண்டை போட்டு
உணவுகொள்வதே எங்கள் வாழ்க்கை ................

ஆறுதல் நீட்டும் கரங்கள் இல்லை
அடித்து விரட்டும் மனிதர்கள் மத்தியில்
பெண்ணாய் பிறந்தால் இன்னும் கொடுமை
வாயால் சொல்ல வார்த்தை கொடுமை ............

குளிக்க வைத்து கொஞ்சி சோறூட்டி
சிகைவாரி சிங்காரித்து
பள்ளிக்கு அழைத்துபோகும் அன்னையை பார்த்தல்
இதயம் கரையும் எங்கள் நெஞ்சம் சிதறும் .........

துள்ளி விளையாடும் வயதில் நாங்கள்
கெஞ்சி கெஞ்சியே பிச்சை கேப்போம்
பள்ளி புத்தகம் சுமக்கும் வயதில்
குப்பை மூட்டையை சுமந்தே கழிப்போம் ...........

பெற்றவர்களோடு பிள்ளைகள் போகும்
காட்சிகளைக்கண்டால் ஏக்கம் பிறக்கும்
விதியை நினைத்து மதியை மாற்றி
ஆறுதல் கொள்வதே எங்கள்வழ்க்கம்.............

பண்டிகை நாட்களில் பசியும் ஆறும்
புது கந்தல்களோடு எங்கள் கவலை தீரும்
வீடு வீடாய் சென்று சென்று
அவர்கள் மகிழ்வை ரசிப்போம் மறைந்து நின்று .......

நாங்கள் வேலைதேடி போகும்வேளையில்
வீட்டு வேலையே அதிகம் கிடைக்கும்
பெண்களாய் இருந்தால் மானம் போகும்
ஆண்களாய் இருந்தால் தன்மானம் போகும் ........

ஒழுக்கம் கெட்ட சிலரால் நாங்கள்
உறவு கெட்டு அனாதை ஆனோம்
மனித மனங்களே கொஞ்சம் மாறுங்கள்
எங்களையும் கொஞ்சம் தேற்றுங்கள் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Jul-13, 7:51 am)
பார்வை : 80

மேலே