காத்திறாதே

--- காத்திறாதே ---


சிறு பார்வையும்
ஒரு முத்தமும்
மயக்கம் தரும்
கைபேசி இல்லா காலத்து
காதல் இது.

உன்னை கவர்ந்திழுக்க
கற்பனை சிறகால்
வார்த்தைகளை
பொருக்கி எடுக்கும்
என்னை
நீதான் திசை திருப்பினாய்....
"சமூக மாற்றம் கேட்டு
எழுது ஒரு பாட்டு"

உலகின் பல முகங்கள்
பளிச்சிடும்
என் கவிதை கண்ணாடியில்
யாருக்கும் தெரியாமல்
பதுக்கி வைத்திருக்கிறேன்
பாதரசம் போல் உனை...

காந்தி ஜெயந்தி
விடுதலை நாள்
குடியரசு தினமென
எல்லா விடுமுறையிலும்
பூங்காவை தாண்டி
இழுத்து செல்கிறாய் எனை
ஒரு கருத்தரங்கிற்கு.

உன் அப்பாவின் மரணத்திற்கு
பிறகொரு நாளில்
சந்திக்கிறோம்...
ஆறுதலோடு நான்
அருந்ததிராய் புத்தகத்தோடு நீ...

"எவன் எதிர்த்தால் என்ன?
இறுதிவரை
இருப்பேன் உன்னோடு"
ஆசுவசபடுத்துகிறாய் எனை
அடிக்கொரு முறை
மடி சாய்த்து..

குத்திய முல்லை எடுக்க
குனிந்து கவிழ்த்தி கவனிக்கிறேன்
மெல்லிய பூவிதழாக
தேய்ந்த உனது செருப்பை
பிய்யாமல் பிடித்திருக்கிறது
ஊக்கு.

மிதிவண்டி சங்கிலி
தீட்டிய கரியோடு
பிரியும் தருவில்
கைகள் பற்றி அழுத்துகிறேன்
முகம் சுருங்குகிறாய் நீ....
உணரவில்லை நான்
மஞ்சள் அப்பிதால்
மறைந்திருக்கிறது தீப்புண்.

உயிருள்ள நம்
காதலை
காமம், நாடகமென
கண்டித்தார்கள்
புணர்வதற்க்கென்றே
தெருவுக்கொரு பெண்ணை
வைத்திருக்கும்
பெரிய மனிதர்கள் கூடி..

பக்குவமில்லாத வயதென்பதால்
பிரித்தார்கள் நம்மை...
அனுபவம் முதிரிந்த
ஊர் தலைவர்
முறைப்படி மனம் முடிக்கிறார்
மூன்றாம் தாரமாக
மங்கை ஒருத்தியை.

சோத்துல கை வைக்கும் போதோ
அம்மணம் மறைக்க ஆடை உடுத்தும் போதோ
"எவே கையில செஞ்சதோ இது"ன்னு
தீட்டு பார்க்குறதில்ல எவனும்

குருதி தானம் செய்யும் கருத்த இளைஞனிடமோ
கும்பலாக ஒரு பெண்ணை கற்பழிக்கும் போதோ
சாதி கேக்குறதில்ல எவனும்..

அறவியல் நம்புறவே
குரங்கிலிருந்து வந்தோம்முன்னு
சொல்லுறான்..

ஆன்மிகம் நம்புறவே
ஆதம் எவாளுன்னு
சொல்லுறான்...

அரசியல் பேசுறவே
ஒருதாய் பிள்ளைன்னு
சொல்லுறான்..

பொறவென்னடா சாதி ?

மலம் அள்ளுகிற மனிதன்
எந்த சாதி?
குண்டி கழுவும் போது
உன் கை
அந்த சாதி.

மெய்மறக்கும் மெல்லிசையில்
களப் போராளியின் புத்தகத்தில்
சமூக நீதிக்கான தேடலில்
விடியலை எதிர்காணும் பயணத்தில்
கடந்துவிடுவேன்
உன் பிரிவின்
ரண பொழுதுகளை.

நமக்கான நீதியை
இந்த சமூகம்
பெற்றுத்தருமென்று
காட்டுத்தனமாக நம்பி
வீட்டு பிணமாக இருந்துவிடாதே...

என் சடலம் கண்டால்
சந்தேகி...
அமைதி இழந்தால் நீ
கண்ணகி...

நம் ஊரின் குடிசைகள் எரியும் வரை
காத்திறாதே!


--- தமிழ்தாசன்---
(15.07.2013)

எழுதியவர் : தமிழ்தாசன் (15-Jul-13, 6:13 pm)
பார்வை : 118

மேலே