காதல் போயின்... போகட்டுமே!!

உருகி உருகி
குழைந்து குழைந்து
தவழ்ந்து தவழ்ந்து
எங்கும் வாழ்ந்த காதல்
மறைந்ததாம்

கண்ணில் வலைவீசி
காலடி பார்த்து
தடம்பதித்து நடந்து
காதல் நோயினால்
சிக்குண்டு
சீக்குண்டு
வளர்ந்த காதல்
மறந்ததாம்

காலமோ
விதியோ
சதியோ
பாவமோ
சாபமோ
காதல் பிரிந்ததாம்

காதலனும் காதலியும்
காத தூரம்
தொலைந்தார்களாம்

காலம் உருண்டு ஓடியதாம்
காதலன்
பெற்றோர் விருப்பத்திற்கு
திருமணம் செய்தானாம்

காதலி
அவள் பெற்றோர்
வற்புறுத்தலால்
அடுத்தவனை
விருப்பமில்லாமல்
கட்டிக் கொண்டாளாம்

முன்னாள் காதலர்கள்
காலம் கடந்து
சந்தித்துக் கொண்டார்களாம்

அவன்
அவளிடம் சொல்கிறான்
உன் பெயரைத்தான்
என் பெண் குழந்தைக்கு
சூட்டியிருக்கிறேன் என்று

அவள்
அவனிடம் சொல்கிறான்
உன் பெயரைத்தான்
என் ஆண் குழந்தைக்கு
சூட்டியிருக்கிறேன் என்று

என்னடா கதையிது ?
எவனிடம் விடும் நூல் இது?

அப்படியாயின்.,

காதலன்
இவனை நம்பி
வந்தவளிடம்
நன்றி கெடவில்லையா?

காதலி
தன்னைக்
கைப்பிடித்தவனுடன்
தனிமையில்
உண்மையுடன்
உறவாட முடியுமா?

இல்லையாயின்.,

காதலி
காதலனுடன் வாழ்வதுபோல்
கணவனுடன் வாழ்கிறாளா?

காதலன்
காதலியுடன் வாழ்வதுபோல்
மனைவியுடன் வாழ்கிறானா?

அட மட மானிடரே
உங்கள் உண்மையான
உணர்வுகளை
எப்போதடா புரிவீர் ?

உங்கள்
உண்மையான அன்பை
எப்படியாடா அறிவீர் ?

உங்கள் மீது
காட்டப்படும்
உணர்வினை அன்பினை
எப்படித்தான் அறிவீர் ?

இப்போதைக்கு வாய்த்த
வாழ்க்கையை
எப்படி நிம்மதியாய்
வாழ்வீர் ?

காதலனே
நீ உன் மனைவியின்
மனதை
நீ அறியாமல்
எத்தனை காலம்
வாழ்வை நடத்துவாய் ?

காதலியே
கணவனின் மார்பில்
புதைந்து கொண்டு
எத்தனை காலத்திற்கு
காதலனுடன் பேசுவதாய்
பேசிக் கொண்டு இருப்பாய் ?

அவலை நினைத்து
உரலை இடித்த கதையாய்
வாழ்வது
எதற்கு ?

உங்கள் உறவை எண்ணி
உடன் வந்த துணைக்கு
துரோகம்
செய்வது எதற்கு ?

காதல் காதல் என்று
பொய் வேடம்
இனியும் எதற்கு ?

வாழ்வை
புரிந்து கொள்ள
புத்தியை தெளிவிக்க
நேரத்தை ஒதுக்கு !

ஊமைக் கனவு
ஒன்றுக்கும் உதவாது !

தன்னைத்தானே
ஏமாற்றிக் கொள்கிறோம்
என்பதை
ஆராய்வீர் இனியாவது !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (29-Jul-13, 1:18 pm)
பார்வை : 138

மேலே