உனக்கென்ன செலவு..?”

“உண்ண உணவு
உடுகக உடை
இருக்க வீடு...
எல்லாம் நான் தருகிறேன்..
அப்புறம் உனக்கென்ன செலவு..?”
நீ
எனக்கு தாலி கட்டியபோது
அது எனது கழுத்துக்கு
மட்டுமெனத்தான் நினைத்தேன்.!
அது எனது
சுதந்திரத்தையும்
வேலையையும்..
நேரத்தையும்...
சேர்த்துக் கட்டப்பட்டதென
நினைத்திருக்கவில்லை..!
இப்போதெல்லாம்,
கட்டுப் படுத்த முடியாத
கேள்வி கேட்கும் -உனது
சுதந்திரத்தை நினைத்தால்கூட
பயமாய் இருக்கிறது..!
“ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கையில்லை..”
என்பதெல்லாம் சரிதான்..,
அதற்காக..
பட்டுப் பூச்சியிலிருந்து
பட்டு வருகிறது..
கம்பளிப் பூச்சியிலிருந்து
கம்பளி ஏன் வருவதில்லை..?
என்பது போலவா கேட்பாய்.?
அன்புக்கு அடிமையாக
இருப்பது சுகம்தான்
என் கணவனே..!-அது
அறியாமையெனில் நரகமே..!