-நான் கவிஞனா..? ச்சே..!!

||
||
--இவனை
எப்படியாவது
கவிஞனாக்குங்களேன்
என்ற
ஏளன சுவரொட்டியை
என்னுள்
ஒட்டிய படி உலாவரும்
என் இனிய எழுதுகோலே...!

உனக்கு
மட்டும் தான்
தெரியும்..
நான் எப்படியாவது
கவிஞனாகும்
பேராசையில் உன்
கழுத்தை பிடித்த கலவரம்..!

இருப்பினும்
யார் உரைப்பார்.?
என்னை
கவிஞனென்று ..

இரு..
வினவிப்பார்க்கிறேன்...

--ஏய்..
பழைய நிலாவே..!
சற்று திரும்பு...
உன்னை
போன்றதொரு
விலைமாதுவை
நான் கண்டதே இல்லை..!

இனி
எத்துனை
காகிதகாரர்களிடம்
தஞ்சமடைவாய்..
தஞ்சமடையா
உன் தமக்கை
இருந்தால் அனுப்பு..

மனைவியாக
என் எழுதுகோல்
ஏற்றுக்கொள்ளும்...
பின் பிறக்கும்
மழலை
மகிழாதா..?
என் பெரியப்பா கவிஞனென்று...

--தோல்வியில் கூட
துவண்டுபோன
வார்த்தையைத்தானே
துப்ப முடிகிறது...

அப்படியானால்
பிறிதொருமுறை
பிரிந்துவிடேன்
என் நேசமான பாதகியே...

துவண்ட
எழுத்துக்களையெல்லாம்
துவட்டி பிழிந்து,
கவிதை காற்றில்
உலர...
காகிதக்கொடியில்
கவனமாக காய வைப்பேன்...

காய்ந்த எழுத்துக்கள்
ஒன்று கூடவா
உளறாமல் போகும்,
நான் கவிஞனென்று...

--பக்கங்களை
நிரப்ப
பாடல்கள் எழுதும்
கவிஞர்கள்
மத்தியில்...
எரியும்
வார்த்தைகளை
எடுத்து,
ஏட்டில் கவிதை
பசை தடவி,
எப்படியாவது
ஒட்டிவிட வேண்டும்...!

எரிந்தாலும்
பரவாயில்லை..
கருகாத
காகிதப்பகுதியில்
தொங்கும்
கடைசி வார்த்தைக்கூட
என்னை
கவிஞனாக்க
முயற்சிக்காதா என்ன.?

இருந்தாலும்
ஒரு ஐயம்..!

வெயில்
காலத்தில்
என் எரியும்
கவிதைகள்
விற்றுத்தீராதோ என்று...!


--இது
இனிப்பான கவிதையடா.!
என்று எழுதிய
என் கவிதைகளின் பக்கம்
ஒரு எறும்புகூட
தலைவைத்து
படுக்கவில்லை..!

வெட்கம் தான்...


--'இது என் சோகம்' என்று
நான் நீண்டு
வர்ணித்த வாக்கியங்கள்
அழுது அழுது
என் வெள்ளை
சுமைதாங்கியை
ஒரு முறைகூட
நனைத்து
துக்கம் அனுசரிக்கவில்லை...

துக்கம் தான்...

இனி,
நான் எங்கிருந்து கவிஞனாக...


அம்மா....???

நீ, என்னை
சுமந்த தசயுகத்தில்
ஒரு முறையாவது
கவிதை புனைய கற்று
தந்தாயா..?

பின் ஏன்.?

நான்
பிறந்து கத்தியதை
மட்டும் கவிதை
என்று
சொல்லி சிரித்தாய்..??

ஓ....

விளங்கிற்று....

என் தகப்பன்
உன்னில்
எழுதிய
முதல்
கவிதையல்லவா நான்...!

அய்யகோ.....

நான்
கவிஞனாகவே முடியாதா..?

--இல்லை..
நிச்சயம் நடக்கும்...
அந்த
தொடுவானத்துகளை
என் தூண்டில்
பிடிக்கும்...
அதுவரை வேறு
வழி இல்லை..

இப்போது...
நான்
கழுத்தைப் பிடித்தவனிடமே
கை ஏந்தி
நிற்கிறேன்...

எனக்கு நீயே
பட்டையமிட்டுத்தா..
'நான் கவிஞனென்று"

என் இனிய எழுதுகோலே....!



--வரிகள்..
க.ஷர்மா.

எழுதியவர் : க.ஷர்மா. (13-Aug-13, 1:08 pm)
பார்வை : 525

சிறந்த கவிதைகள்

மேலே