[473] உரிமைக்காகக் கைகளை உயர்த்து..!

உரிமைக்காகக் கைகளை உயர்த்து!

உதயம் என்பது உனக்குள் இருக்கு!
உனக்குள் இதயம் துடிப்பது எதற்கு?
சதயம் என்பது செயல்களின் தொகுப்பு!
சங்கிலி அதுவெனில் வயதின் கணக்கு!
---------(சதயம்= நாள்)-------------
விடியலைக் கண்டே விழிப்புடன் எழும்பு!
விடைகளைத் தேடி வினைகளைத் தொடங்கு!
தடிகளைக் கையில் தாங்கிட விரும்பு!
தற்காப் பின்றித் தாக்கிடத் தயங்கு!

இன்பம் என்பது எப்படி இருக்கும்?
இருப்பதை மறைத்தால் எப்படிக் கிடைக்கும்?
துன்பம் வரலாம்; தொடர்ந்தேன் நிலைக்கும்?
துடைக்கும் கைகள் துணையெனக் கிடைக்கும்!

எத்திசை விடியும் என்பது எதற்கு ?
எழுந்து நடந்தால் வருவது கிழக்கு!
புத்தியை மறைக்கும் பொருளினை விலக்கு!
புதுமையை விரும்ப மனத்தினைப் பழக்கு!

இலக்கைக் காட்ட மறந்திடும் என்றால்
இலக்கியம் என்பதும் இருப்பது எதற்கு?
உலக்கை யாக வாழ்வதை நிறுத்து!
உரிமைக் கென,அதை கைகளில் உயர்த்து!
***

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Aug-13, 1:47 pm)
பார்வை : 145

மேலே