கருவறை மகளுக்கு ஓர் கடிதம்....

மூர்ச்சையடையா என் மூச்சின் ,
மூளையில் உதித்த முழுஇசையே ,
முன்பே உனக்கு எழுதுகிறேன்
முட்டாள் உலகின் மூர்க்கத்தனங்களை...!!

கருவறையில் நான் கிடக்கையிலே
கண் திறக்கா வழியாக,
அன்றே அவள் அழித்திருந்தால்
கவலையின் கணம் தாங்கும் கழுதையாய்
நான் வழ்ந்திருக்க மாட்டேன்

பத்து மாத இருள்கடந்து
பெண்ணாய் நீ பிறந்துவிட்டால்
பெற்றவளாய் உனக்குச்சொல்ல
பல விதிகள் இங்குண்டு ...!!

உனை தாங்கும் சுமையொன்றும் சுமையல்ல என் மகளே,
இம்மண்ணில் நீ தாங்கும் சுமையெண்ணிப்பார்க்கையிலே
உனை தாங்கும் சுமையொன்றும் சுமையல்ல என் மகளே,
சிற்றாடை உடுத்துகையில் சிரமம் ஒன்றும் இல்லை உனக்கு,
தொல்லைகளின் தொடக்கமெல்லாம் பதினாறின் முடிவில் தான்..!!

சிரித்து மட்டும் பேசிவிடாதே செல்ல மகளே,
சட்டென்று வேசியென ஏசிவிடும் உலகமிது,
மீசை மட்டும் முளை த்துவிட்ட காரணத்தால்
ஒரு மனதில் பல காதல் கொண்டுலவும் கூட்டமிது.!!

மனமொத்து மணம் கொள்ளும் மாங்கல்ய வீட்டுக்கு,
பணம் மட்டும் தான் இங்கு படிக்கட்டுகள்..!!

ஆணென்று அவர் வாழ பெண்ணொருத்தி அடிமையென,
அன்றொரு நாள் பாட்டன்ங்கள் சொல்லிவைத்த
அணைகளெல்லாம் உடைத்தெரிய,
வெல்லமென நீ ஓடும் வேகமது வேண்டுமடி..!!

உண்மையைய் உரக்கச் சொல்லும்
உறுதி மட்டும் போதுமடி
பழி கேட்டு பயந்து கிடக்கும்,
பழைய பேச்சு முற்றுபெரும்..!!

மணமுடித்து மாதங்களில் மழலை வரம் தாமதித்தால்,
மலடியெனும் பெயரும் உனக்கு மாதர்குலம் வழங்குமடி..!!
பல பட்டம் கடந்துபின் பெண் உனக்கு பிறந்துவிட்டால்
மாறப்போவது மாற்றங்கள் மட்டுமே மனிதர்கள் அல்ல,
ஆதலால் மகளே,
அவளுக்கும் சொல் என்
எச்சரிக்கை வார்தைகளை..!!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (20-Aug-13, 5:34 pm)
பார்வை : 101

மேலே