பாலைவனம் சுடவில்லை!
திரி இங்கே எரிகிறது!
திரைகடல் தாண்டி
தெரிகிறது வெளிச்சம்!
இழப்பீடு இல்லாத
இளமையை விதையாக்கி
எதிர்காலம் பயிர்செய்யும்
ஏமாளி விவசாயிகள் நாங்கள்!
வேருக்குள் கண்ணீர் ஊற்றி
வளர்க்கின்றோம் பன்னீர் மரங்கள்!
பாலைவனம் சுடவில்லை!
பாழும் மனம்
இங்கே இருந்தால்தானே!
அலைகடல் தாண்டி
அலைந்திடும் உயிர்க்கு
அலைபேசியே ஆதாரம்!
ஏக்கமெனும் இரையை விழுங்கி
வலைதளங்களில் சிக்கிக்கொண்ட
வழியற்ற மீன்கள்!
ஃபேஸ் புக்கில் உறவாடி
ஸ்கைப்பினிலே ஊடல் செய்து ....
என்ன இது?
கல்யாண வாழ்க்கையா?
கணினியில் வாழ்க்கையா?
பண்டிகைக் காலம்....
விடுதலைக்கான ஏக்கத்தில்
விம்மியே கரைகிறது
விடுமுறை நாட்கள்!
ஆறுதலாய் நண்பர்கள்
அருகில் இல்லையென்றால்
அறுந்து போய்விடும்
அத்தனை நரம்புகளும்....
உண்ணும் உணவில் உடுக்கும் உடையில்
பருகும் பாலில் படுக்கும் பாயில்
பல பல நாடுகள்! ஆனாலும்
இதயம் மட்டும்
இந்தியத் திரு நாட்டில்!
வருடத்தில் ஒருமாதம்
வருகின்றோம் ஊருக்கு!
திர்ஹத்தை செலவாக்கி
ஈரத்தை சேமிக்க!
காய்ந்திடும் இதயத்தை
கருகாமல் நனைத்துக்கொள்ள!
எங்கேயோ கேட்கும் குரல்!
இழப்புகள் மாத்திரம்தானா?
பெற்றதும் இருக்கிறது!
பத்திரமாய் பெட்டிக்குள்!
ஆம்! அவையைனைத்தும்
விழிவிற்று வாங்கிவைத்த
சித்திரங்கள்! விசித்திரங்கள்!!
திரி இங்கே எரிகிறது!
திரை கடல் தாண்டி
தெரிகிறது வெளிச்சம்!
தனிமை....... கவிமகன் காதர்