வஞ்சகத்தின் தீவு....
அதன் பிறகு...
உறவுகள் விலக்கப்பட்ட
ஒரு சிறுவனென...
அலைந்து கொண்டிருந்தேன்
உங்களின் வீதி எங்கும்.
குளத்தின் சலனங்களில்...
குழைந்த ஒரு நிலவென...
வளைந்து கசங்கியது மனது.
தன முகம் பிடிக்காது...
கண்ணாடியைக் குத்தி...
தன்னைக்
காயம் செய்து கொள்ளும்...
குருவியாகி இருந்தேன் நான்.
பீதி வளரும் ஜன்னல்களுடன்
வழியற்றுத் திறந்து கிடந்தது
என் மன வீடு.
சபிக்கப்பட்ட ...
என் கால நதி...
கரையற்று இருந்தது.
இடைவெளியற்றதாய்
பெருகிக் கொண்டிருந்தது....
எனக்கும்...வாழ்விற்குமான...
இடைவெளி...
சிலந்திகளின் காலத்தில்....
இரையாகுதலிலிருந்து
பிழைத்தலின் பொருட்டு...
எனக்குள் உருவாகத் துவங்கியது...
வஞ்சகத்தின் தீவு.