இப்போதும் வலிக்கிறது.....

என்னுள் இருந்து மாத்திரம்
நான் சுயநலமாய் எண்ணியவை
நகங்களாய் உன்னைப்
பலப் பொழுதும் கீறி விட்டது...
உன்னுள் உதிரம் கசிந்த
அந்தத் தருணங்களை
உணராமலே இருந்து விட்டேன்....

இரைதேடித் திரியும்
காட்டு மிருகங்கள்
கடித்துக் குதறுவதைப் போல்
என்னை எது செலுத்தியது...
அம்பை அறிந்திருந்த நான்
வில்லின் கூர்மையை
விளையாட்டாய் எடுத்தது ஏன்?

எந்தன் ஆழ்மனதில்
மண்டியிருந்த அழுக்குப் பாசிகள்
ஊசியாய் உன்னைத் தைத்ததை
எப்படி நான் அறியாமல் போனேன் ?
உனக்கு எப்போதோ தந்த காயம்
எனக்கு இப்போதும் வலிக்கிறது....

வெறும் காயம் என்றால் மருந்திடலாம்...
வடுக்களே மன்னித்து விடுங்கள்!


வருத்தம்..........கவிமகன் காதர்..

எழுதியவர் : கவிமகன் காதர் (2-Sep-13, 6:52 pm)
பார்வை : 89

மேலே