நடிப்பு...!!!
உலகம் மனதால்
ஊனமாகி நாளாகிவிட்டது
உயிர்களின் உணர்வுகளும் உயிர்த்துடிப்புகளும்
உண்மையற்று நடிப்பாகி நாளாகி விட்டது.
நடிப்பதற்காக கண்ணீர் சிந்தி சிந்தி
உண்மை கண்ணீரும் இன்று
நடிப்பாகி அர்த்தமற்று காலாவதியாகி விட்டது.
அன்பும் பரிவும் நகைப்பிற்கும்
அழுகையும் சிரிப்பும் ஏளனத்திற்கும்
பலிக்கடாவாக்கி பலகாலமாகி விட்டது...
உணர்வுகள் செத்துப்போய் மனிதன்
உயிரோடு உலவுகின்றான் உலகில்
உண்மைகள் சாகடிக்கப்பட்டு
கிரியைகளும் செய்து திதிகள் பல கடந்தாயிற்று..
உயிராய் நேசிக்கும் உறவுகளும்
புரிந்துணர்வின்றி உண்மை அன்பினையும் ஒற்றைச்சொல்லில்
புதை குழி தோண்டி புதைக்கின்றார்கள் "நடிப்பு" என்று
நடிப்பு என்பதை அறியும் வரை
நடிப்பவன் நடித்து கொண்டிருக்க
நடிப்பை நம்புவோன் (நம்ப)நடிக்க வைக்கப்படுவான்..
உணர்வுகளும் வேதனைகளும் நளினங்களாக நயம் பிடிக்கப்படும்....
பாசாங்குகளும் பொய்களும் ஒப்பனைகளாக அலங்கரிக்கப்படும்...
காலங்காலமாய் அரங்கேறி வருகின்றது-இந்த
நடிப்பு நாடகம்(ஏமாற்று வேலைகள்)
நாடக(உலக)அரங்கில்...!
நாடகத்தின் ஆட்டம் தாங்காது
நாடக அரங்கம் ஆட்டம் காணும் வரை...
நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும்...
நாடக அரங்கம் ஒன்று ஒத்திகையும்
பார்க்கப்படுகின்றதாம் விண்வெளியில்
ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அரங்கமா - என்று
ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதாம்....
அரங்கம் ஒன்றின் மீது போடும் ஆட்டமே
அரள வைத்து அல்லாட வைப்பது போதாதோ...?
அளவுக்கதிக நடிப்பினை தாங்க முடியாத அரங்கம்
அவ்வப்போது தற்கொலைக்கு எத்தனிக்கின்றது...
அடிக்கடி செப்பனிடப்பட்டு அரங்கம் தள்ளாடி
அரை உயிரில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாகி
அழகாய் தான் காட்சி கொடுக்கின்றது-ஒரு வேளை
அரங்கமும் நடிக்கின்றதோ???