கண்தானம்

அங்கங்கள் சிதையாமல்
அளவிலும் குறையாமல்
மானிடராய் பிறப்பதே
மண்ணில் அரிதானது !

உயிராய் வரும்போதே
ஊனமுடன் பிறந்தால்
ஊமையாய் இருந்தால்
உய்ப்பதே கொடுமை !

நோயின் தாக்கத்தால்
குறைந்திட்ட பார்வை
விபத்தின் விளைவால்
இழந்திடும் கண்கள் !

இதயம் நின்று மறைந்திடும்
இமைகள் மூடி இறந்திடும்
மண்ணிலே கலந்திடும்
மானிட உயிர்களே நாம் !

நம் வாழ்வு முடிந்ததும்
நாமறியோம் எதனையும் !
நானிலத்தில் இருப்பவர்
நாளும் இன்புறட்டும் !

விழியில்லா மாந்தரும்
வழியறிந்து வாழ்ந்திட
வழிவகை செய்திடவே
வழியொன்றை காண்போம் !

பார்வை இல்லாதோர்
பாரினை பார்த்திடவே
கண்தானம் செய்வதை
கடமையென கொள்வோம் !

சுவாசம் நின்றதால் நமை
சுட்டெரிக்கும் முன்னே
சாசனம் எழுதிடுவோம்
சட்டப்படி செய்திடுவோம் !

நம் ஒருவர் விழிகளால்
இரு வேறு உயிர்கள்
இவ்வுலகை கண்டிடவே
கண்தானம் செய்திடுவோம் !

நம் உடல் மறைந்தாலும்
நம் விழிகள் வழியாக
நாம் வாழ்ந்த பூமிதனை
நாமும் கண்டிடுவோம் !

பிறப்பின் உரிமை நமக்கு
இறப்பின் பின்னே செய்திட !
உறுப்புகளை வழங்கிடவே
உயில் ஒன்று எழுதிடுவீர் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Sep-13, 8:58 am)
பார்வை : 162

மேலே