உறக்கப் பாடம்.....
ஒத்திகையில் இறக்கும்
ஒரு திகை நிலை.
ஒருத்தி கையில் இருக்கா
ஒரு வகை நிலை.
இரக்கம் உள்ள மனது
உறக்கம் கொள்ளும்
இறக்க உள்ள மனது
உறக்கம் கொல்லும்.
உறங்கிக் கனவு காணும்
ஒரு கூட்டம்
உறங்கக் கனவு காணும்
பெருங் கூட்டம்
உறங்கும் மனிதனின் உள்ளம்
விழிப்பில் உள்ளது
விழித்த மறுகணம் உள்ளம்
உறங்கிக் கொள்கிறது
உறக்க நடிப்பு களைய
நடிப்பு உறங்க வேண்டும்
இருக்கும் உண்மை தெரிய
படிப்பில் இறங்க வேண்டும்
துக்கம், தூக்கம் தூக்கும்
தூக்கு...
தூக்கம், துக்கம் தூக்கும்
தூக்கு...
நின்ற நிலையில் சென்ற வழியில்
உறங்கும் என் மகள்
தூங்கவைக்கும் போது மட்டும்
தூங்கவில்லை
அதுவாக நடக்கும்வரை
எதுவும்
அதுவாக நடப்பதில்லை
என்மகள் உரக்கச் சொன்ன
உறக்கப் பாடம் இது...