காற்றுக்கு மரணமில்லை...!(ரோஷான் ஏ.ஜிப்ரி)
16-09-2000 அன்று வானூர்தி விபத்தில் பலியான
எம்.எச்.எம்.“அஷ்ரஃப்” அவர்களின் நினைவாக!
********************************************************************
சின்ன அதிர்வுகளையே
தாங்கிக் கொள்ளாமல்
தவித்த மனங்களில்
ஒரு பேருடியாய்
ஒளிபரப்பானதுன் பிரிவு..!
உனக்கா மரணம்?
உலங்க வானுர்தியா
உன் உயிர் வாங்கியது?
உதய தரிசனம் தந்த
கிழக்கின் கமலமே
அந்தி மந்தாரயாய்
பூத்துநின்ற புனிதமே
வேரூன்றிய விருட்ஷமே
அனைத்து மனங்களிலும்
பூரித்து நின்ற புனிதமே
உனக்கா மரணம்?
உலங்க வானுர்தியா
உன் உயிர் வாங்கியது?
நீ எவரெஸ்டை விட
மிஞ்சிய இமயம்
கிழக்கிலங்கை மக்களின்
இதயங்களில் ஓர்
கிரீடமாய் இருந்தவனே
இன்னும் இருப்பவனே
உலகம் வியந்து போற்றிய உத்தமனே
உனக்கா மரணம்?
பல இதயங்கள் இன்னும்
ஏற்றுக் கொள்ளவே இல்லை உன் இழப்பை
நீ வாழ்வதாகவே எண்ணி வாழ்கிறார்கள்
சிலர் தமது இருப்பை தக்கவைக்க தகுதி இன்றி
உன் பெயரை சொல்லியே
வாழ்கிறார்கள் ஜடங்களாய்!
வெல்வெட்டுகளை விரும்பியவர்கள் நடுவில்
கல்வெட்டாய் காட்சி தந்தவனே
துப்பாக்கிகளால்
துளைக்க முடியாது போன உன் உயிரை
சிறு மர்மத் தீப்பொறி தீண்டியதுதான்
ஆச்சரியத்துக்குரிய அம்சம்
இருந்தும்;நீ மரணிக்கவில்லை
ஓய்வெடுத்திருக்கின்றாய்.
வான வெளியில் பிரிந்து
காற்று மண்டலத்துடன் கலவியாகி
வசிப்பவர்கள் வாசிக்கும் காற்றில்
படிக்க இயலாத பக்கங்களாய் நீ..
வாழ்கிறாய் என்பதுதான் வரலாறு!
கல்முனை மண்தந்த காணிக்கையே
“அஷ்ரஃப்” எனும் நாமம்
அழகு நிறை பெற்றவனே
இலங்கை முஸ்லிம் மக்களின்
இதயம் நிறைந்த முதன்மைத் தலைவனே
லட்சோப,லட்ச விழிகளில்
ஈரத்தை அள்ளி இறைத்து விட்டு
நீ காற்றோடு கலந்து இன்று
பதின் மூன்று ஆண்டுகள்
படியேறி போயிடினும்-நீங்கள்
பதித்த தடங்கள்
வரலாற்றின் பக்கங்களில்
வடித்த தடங்களாய்!
மரம் என்னும் வரம் தந்தவனே
நீ சாய்ந்த பின் சரித்திரம் ஓய்ந்தது
உன்னுடன் பின்னியிருந்த
விழுதெல்லாம் பழுது..
ஆணிவேரென எண்ணியதெல்லாம்
அறுகம் புற்களாய்
துயரத்தின் தூளியில்
தொங்கிக் கொண்டிருப்பதாயிற்று
உன்னில் கூடுகட்டி குடியிருந்த
தூக்கணாங் குருவிகளின் நிலை.
விழிகளை ஈரமாக்கி
இதயங்களை காயமாக்கி
ஒரு சோக வரலாறாய்
பேசப் படுகின்ற பிரியத்துக்குரியவனே
தவிக்கின்ற இன் நிசியில்
பைசா கோபுரமாய் சாய்ந்த சாசனமே
இங்கு எவராலும் நிரப்ப இயலா
நிரல்களை விட்டு,விட்டு
அழிவே அற்ற அண்டமொன்றில்
அடைக்கலம் அடைந்து விட்டீர் போலும்
இனி வருகின்ற எந்த மகான்களாலும்
உன் போல் உருமாற முடியாது;
அது சாத்தியம் இல்லை என்பதற்கு
அவர்களின் சம்பாத்தியம்
சத்தியம் செய்கின்றன...
ஆயினும்;
நீங்கள் வாழ்ந்த காலமொன்றில்
பிறந்ததை எண்ணி
பெருமிதம் கொள்கிறேன்
காரணம் கனிசமானவை;
நீ..நெருப்பு
எப்பவும் உயர்ந்து எரிந்து
உருகி தீர்ந்ததால்
நீ..சூரியன்
புலரும் பொழுதெல்லாம்
இருள் துடைப்பதே
இலக்காய் கொண்டதால்
நீ..நிலா
பௌர்ணமியாய் சமுகத்துக்கென்று
விடிய,விடிய விழித்திருந்த
தங்க விளக்கு
நீ..கடல்
ஆழமோ நீளமோ உன்னை
அளவிட முடியாததால்
நீ..காற்று உனக்கு மரணமில்லை.
வாழுகின்ற காலமெல்லாம்
வசிக்கின்ற சந்ததியும்
சுவாசிக்கும் காற்றில் நீ
வசித்துக் கொண்டிருப்பதால்
உனக்கு மரணமே இல்லை!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.