அம்மாஅம்மாதான்

அம்மா எனும் சொல்லுக்கு
அகராதித் தேடல் எதற்கு?
அவள் மொத்த அன்பதற்கு.
அவள் விடுத்து பொருளெதற்கு?

என்னோவு அவள் வலிக்கு
தன்னிலை மறந்தாளுக்கு
என்ன பொருள் சொல்வதற்கு
இருக்குமோ அகராதிக்கு?

என்னழுகை வேண்டலுக்கு
கண்ணீரோ அவளுக்கு!
என்ன பதம் காண்பதற்கு
எழுத்திருக்கும் நூலிற்கு?

அன்னையவள் பாசத்திற்கு
அடுத்தென்ன இணையிருக்கு?
அவள் கொடுத்தக் கடன் கணக்கு
அடையுமோ சொல் எனக்கு!

அம்மா தந்தப் பால்க் கணக்கு
அதற்கென்ன எழுத்திருக்கு?
அதியற்புதத் தடுப்பு மருந்துக்கு
அதற்கென்ன விலையிருக்கு?

தூங்காமல் விழித்ததற்கு
தூக்கியென்னை அணைத்ததற்கு
ஏங்கி வாசல்க் காத்ததற்கு
ஏது செய்தேன் அவளுக்கு?

தூளி சொன்னப் பாட்டுக்கு
தோள் சுமந்தப் பாடுக்கு
வாழ்ந்த அவள் கருவறைக்கு
வரிக்கென்ன கணக்கிருக்கு?

என் பசி உணர்ந்தாளுக்கு
தன் பசி மறந்ததெதற்கு?
ஊட்டியாளை ஊட்டுதற்கு
ஒரு கடன் தீர்ந்ததெனக்கு.

கழுவிக் காத்தத் தாயாளுக்கு
கடன் குறையச் செய்தெனக்கு
வேறுக் கடன் முடிப்பதற்கு
வறுமைப்பட்டேன் காலத்திற்கு.

மொழி தந்தாள் புரிவதற்கு.
வழி சொன்னாள் வாழ்வதற்கு.
பழிநேராக் காத்தாளுக்கு-கடன்
கழிப்பதெப்போ ஆத்தாளுக்கு?

மஞ்சம் நான் அயர்வதற்கு
பஞ்சமான வள்ளலுக்கு
வெஞ்சாமரம் வீசுதற்கு
வேண்டலும் தானெனக்கு!

எனையீன்ற தாயுனக்கு
என் பிள்ளை பரிசுனக்கு.
உன் பெருமை சொல்லுதற்கு
உன் பேரே காப்பதற்கு!

கடன் பட்டேன் தாயுனக்கு!
கலங்குதே நெஞ்செனக்கு!
உடன் பட்டேன் நானுனக்கு
உற்ற தெய்வம் வேறெதற்கு?

தாயினும் சிறந்ததற்கு
தவம் உண்டோ பெறுவதற்கு?
கோயிலும் நீ எனக்கு!
குல தெய்வம் நீ எனக்கு!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (28-Sep-13, 7:57 pm)
பார்வை : 881

மேலே