அம்மா என்னை மன்னித்து விடு...
சாப்பிடும்போது இல்லாளின்
சமையல் காரம்
எனக்கு புரையேற
உன் கண்ணில்
நீர் வழியுதம்மா...
உடனே தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கும்
உரிமையை
இழந்து விட்டோமே
என்று கூட இல்லை...
என் உயிரான மகனின்
தொண்டை எப்படி வலிக்குமோ என....
வேகமாக கைகழுவ வரும்போது
வாசல் நிலை
என் நெற்றியில் முட்டிக் கொண்ட போது
உன் நெற்றி நரம்பு
வலியால் துடிப்பது
இங்கிருந்து பார்க்கும்போதே
தெரியுதம்மா.....
ஈரக்கையோடு
நான் நிற்கும் போது
உன் முந்தானை தர
உன் உள்ளம்
துடிப்பதும் நான் அறிந்ததம்மா ....
உண்ட களைப்பு தீர
நான் படுக்க
ஓர் தலையணை தேடும் போது
உன் மடி அதற்கென ஏங்குவதும்
எனக்குத் தெரியுதம்மா ...
ஆனால்
எல்லாம் அறிந்தும்
எதுவும் அறியாதது போல
நடிக்க வேண்டிய....
காலத்தின் கட்டாயத்தில்
இருக்க வேண்டிய...
நான் ஒரு பாவி அம்மா..
அம்மா என்னை மன்னித்து விடு...