மரணத்திற்கு அப்பாற்பட்டவன்

துல்லியமாக என்னைக்
குறிபார்த்துவிட்டாய்
உனது முதுகுகளில் புதிதாக
முளைத்த
துரோகச் சிறகுகளின்
கூர்மையற்ற கொள்கை
குளியலறையிலோ
நடைபாதையிலோ
நூலகத்திலோ அல்லது
வேறெங்கிலுமோ
சினைப்பர் கொண்டு என்னை
சாகடிக்கலாம்
ஆதலால்
கைக்குழந்தை மின்னலைப் பார்த்து
இடியைக் கேட்டு
அச்சமுற்று நடுங்கியழுவதைப் போல
நான் குழப்பமடையப் போவதில்லை
ஒரு ராத்திரிப் பூனையென
இனிமேலேனும் ஒளிந்து கொண்டு
என்னை வேவுபார்க்க முயலாதே
காரணம் நானாக இருப்பவன்
உயிருக்கு ஏங்காத வலிமையான ஆன்மா
உனது சினைப்பரை சுத்தம் செய்
நீ அளிக்கும் மரணத்தை வென்று
கொள்வேன்
போர்க் குதிரையென எந்தக் காயமுமின்றி.

-தீராநதி
அக்டோபர்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (2-Oct-13, 9:52 pm)
பார்வை : 93

மேலே