பயணங்கள்...!!!
ஆதவன் கண்விழிக்க
அவசர அவசரமாய்
படிப்பதற்கு சிலரும்
படிப்பிக்க சிலருமாய்
பள்ளிக்குப் பயணம்..!!
அடிமையென பணிபுரிவதே
அன்றாடக் கடமையென சிலர்...
பணியாளர்களின்
குருதி சுவைக்க சிலரென
அலுவலகத்திற்குப் பயணம்...!!
இல்லத்துப்பணி முடித்து..
பிற இல்லப்பணி முடிக்க
பணிப்பெண்களின் பயணம்..!!
இல்லத்து வேலைகளும்
இன்னலெனக் கருதி
நட்புகளுடன் பொழுதுபோக்க
இல்லத்தரசிகளின்
கடைவீதிப் பயணம்..!!
பிறக்கப்போகும் குழந்தைக்கும்,
தாயுக்குமான பிரார்த்தனையோடு
சிலரின் பயணம்..!!
பிறந்த குழந்தையை
காணச்செல்லும் பயணம்..
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு
பயணம்..!!
எவரும் அறியாவகையில்
காதலன் காதலியின்
முகத்திரையிட்ட பயணம்..!!
பகிரங்கமாய் காதல்வெளிப்படுத்தும்
கன்னியர்களின் துணிச்சல் பயணம்..!!
படிப்பு முடித்தவர்களின்
பணிதேடும் போராட்டப் பயணம்..!!
அரசுக்கெதிரான போராட்டப்பயணம்..
போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகளின் பயணம்...!!
திருமணக் கனவுகளை சுமந்தபடி
இல்லற வாழ்க்கைத்தேடிய பயணம்..!!
திருமண முறிவுக்கென
நீதிமன்றம் நோக்கிய பயணம்..!!
உறவுகள் வளர்க்கும் உன்னதப் பயணம்..!!
விடுமுறைக்கழிக்க
குடும்பத்துடன் சுற்றுப் பயணம்..!
உள்சுமந்து உள்ளத்தில் சுமந்தோரை
முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பயணம்..!!
அவசர சிகிச்சைக்கென
அனுமதிக்கப்பட்ட அன்புடையோரை
பார்வையிடும் பயணம்..!!
ஆன்மதேடலின்
ஆன்மீகப் பயணம்..!!
இவ்வுலகம் துறந்தவர்களின்
இறுதிப் பயணம்..
இறுதிப் பயணத்தில்
ஈடுபடப் பயணமென
நிரந்தரமில்லா
வாழ்க்கைப் பயணத்தில்
வலி, மகிழ்ச்சி, துன்பம்
பாராட்டு, இகழ்ச்சி, சூழ்ச்சி,
ஏமாற்றம், எதிர்பார்ப்பு,
நட்பு, எதிர்ப்பு,உறவு,பிரிவு..
பிறப்பு, இறப்பென...
ஒவ்வொரு நாளும்
ஆயிரமாயிரம் கனவுகள்
சுமந்தபடி அன்றாடம்
மேற்கொள்ளப்படும் பயணங்கள்
அணுதினமும் தொடர்கிறது
எதைத்தேடுகிறோம் என்றறியாமல்
எதையோ தேடியபடியே...!!