மவுனத்திலும் மொழி பேசுகிறாள்!

கண்ணே பார்வையை இழந்துவிடு – அவளைக்
காணவும் இனியும் விரும்பாதே!
பொன்னாய்ப் பூவாய்த் தெரிந்தவள்தான் – நெஞ்சில்
புண்ணாய் இன்று ஆகிவிட்டாள்.

அமைதியைக் குலைத்து எனைஅழைத்து – காதல்
ஆற்றில் மெல்ல தள்ளிவிட்டு
சுமையுடன் நெஞ்சம் தடுமாற – அவள்
சொல்லாமல் தானே கரைசேர்ந்தாள்!

நினைவை ஏனிங்கு விட்டுச் சென்றால் – என்
நெஞ்சம் அதைஇன்னும் மறக்கவில்லை.
தனிமையைத் தேடி அலைந்தாலும் – அவள்
தழுவிய நினைவேன் வருகிறது?

என்னை மட்டும் அழவைத்து – அவள்
எதற்(கு)என் முன்னே புன்னகைப்பாள்?
மவுனத்திலும் மொழி பேசுகிறாள் – இனி
மறதிதான் என் துணையாமோ?

(1975)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (11-Oct-13, 7:23 pm)
பார்வை : 193

மேலே