நெல்லை கண்ணன்-தமிழ் கடல்....
நெல்லை கண்ணன்-தமிழ் கடல்....
ஏன் தமிழ் கடலென்று
பெயர்?
தொல்காப்பிய அருவியொன்று,
சிந்தாமணியாய் தரைதொட்டு,
நரைத்தமிழ் நதியாய் மண்ணில் பாய்ந்து,
காப்பிய கல்லணைகள் ஊடுருவி,
வள்ளுவம் காட்டிய திசையதில் பாய்ந்து,
கடலோடு கலந்திட்ட தமிழன்றோ?...
கட்டுமரங்களுக்கும்,
கட்டிய பெரும் கப்பலுக்கும்,
பேதம் பார்க்காத சமத்துவ கடல்....
இக்கடல் கரைசேர்க்கும்,
சங்குகள் கூட,
கம்பராமாயணத்தை அடிபிறழாமல்
அழகாய் ஒலிக்கும்.....
கண்ணகி உடைத்த சிலம்பினின்று
தெறித்த மாணிக்க பரல்களை,
முத்துக்களாய் உமிழும்
சிப்பிகள்
செறிந்த கடலிது....
வள்ளுவத்தை தேடி அலைகிற
ஒரு வாஸ்கோடகோமாவாய்
நாளும் திசைதெரியாமல்
அலைய விழைகிறேன்,
இக்கடலில்....
கடல்தானே?,
தமிழை குடித்தது.
அதனால்தான்,
நீங்கள் தமிழ் கடல்....
மெரினாவில் காற்று வாங்கி
போகும் காதலர் போல,
காமராசர் அடிக்கடி
காற்று வாங்கி,
காலார நடந்து களிக்கும்
கடற்கரையிது.....
எத்திசை சென்று வலை விரித்தாலும்,
சில திருக்குறள்களும்,
கொஞ்சும் காப்பியங்களுக்கு
சிக்குவது நிச்சயம்....
"யார் கடல் புகுந்தாலும்,
கம்பனாய் கரையேறலாம்",
நீந்துவது இக்கடலில் என்றால்.
இந்து மா கடல் போல,
இலக்கிய "பா" கடல் இது...
ஓயதொலிக்கும்
அலைகளை போல,
உன் குறட்டை ஒலிகளில்
கூட தமிழ் கேட்டு வளர்ந்தவன் நான்....
நெல்லையப்பர் கோவில்,
தெப்ப குளத்தை
ஒட்டியே,
ஒரு கடலிருப்பதை
சிலர்தான் அறிவார்கள்(உங்கள் இல்லத்திற்கு வந்தவர்கள்).
சேது சமுத்திர பிரச்சனை இல்லாத,
சாது சமுத்திரமிது.
ஆனால்,தமிழுக்கு ஒரு இழுக்கென்றால்,
ஆழ்கடல் கூட அதிர்ந்தது நிற்கும்.
உங்கள் கவிதைகளை
பூவென கொண்டு,
பூச்சரம் செய்தால்,
அதன் நீளம் ராமர் பாலத்தையும் மிஞ்சும்.
வல்லரசுகளை விட,
நல்லரசுகலையே,
சூழ்ந்து கொள்ள விரும்பும்
கடலிது....
மொத்தத்தில்,
நற்றமிழ் பேசும் யாரும்,
நங்கூரம் பாய்ச்சலாம்,
இந்த தமிழ் கடலில்.