நேற்று அவள் இருந்தாள்
பாக்கியம் செத்து போனாள்.
மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள்.
பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது.
ஓங்கி ஸ்பானரால் மீண்டும் ஒரு அடி. “னங்” என்ற சத்தத்துடன் ஸ்பானர் எகிறியது. இம்முறை இரத்தம் பெரிதாக சீறவில்லை.
குசினிக்குள் போனார். ஸ்பானரை நன்றாக விம் பார் கொண்டு தேய்த்து கழுவினார். பின்னர் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடுப்புத்துணியால் துடைத்துவிட்டு, நிதானமாக கேத்திலை அடுப்பில் ஏற்றி, தேங்காய் மட்டை வச்சு …. தேநீர் கோப்பையுடன் மீண்டும் நடு ஹோலுக்கு வந்தார். பாக்கியம் இன்னமும் அப்படியே கிடக்க இரத்தம் இன்னமும் கொஞ்சம் பரவி, ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்தன. தேனீரை உறிஞ்சியபடியே சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு, கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து ஈ மொய்க்கும் இடத்தில் பீய்ச்சி அடித்தார். மீண்டும் தேநீர் கோப்பையையும் ஸ்பானரையும் கையில் எடுத்துக்கொண்டு, வெளிக்கதவை நன்றாக சாத்தி பூட்டிக்கொண்டு முற்றத்துக்கு வந்தார்.
அங்கே கழுவிப்பூட்ட கொடுக்கப்பட்டிருந்த ஓவசியர் நாகலிங்கத்தின் பழைய ரலி சைக்கிள் இன்னமும் தலைகீழாக ஒற்றைச்சில்லோடு நின்றது. மற்றைய சில்லை கையில் எடுத்தபடியே நிலத்தில் விரித்துவைத்திருந்த சாரத்தின் மேலே உட்கார்ந்தார் சைக்கிள் கடை சாமி.
பின் சில்லின் நடு அச்சை வெளியே எடுத்து இரண்டு புறமும் கிரீஸ் தடவி போல்ஸ் ஒவ்வொன்றாக அழுத்தியபோது சாமிக்கு கைகள் நடுங்காமல் கவனித்தபோது பார்க்க அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. வருகிற வைகாசியோடு செத்துக்கிடக்கிற பாக்கியத்தை கலியாணம் கட்டி சரியாக முப்பது வருடங்கள். மணவறையில் பக்கத்தில் வந்து நின்ற பாக்கியம் ஞாபகத்துக்கு வந்தாள்.
இவர் களவாக இடுப்பை கிள்ளியபோது அவள் திருப்பி கிள்ளியதும், அதற்கு பிறகு சாமி பேசாமல் விட்டதும் ஞாபகம் வந்தது. முதலிரவில் மெதுவாக முத்தமிட நெற்றியருகே நெருங்கியபோது அவள் வேகமாக பிடரி மயிரை இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்து ப்ச் பிச் என்று … போல்ஸ் ஒன்று கீழே தவறி விழுந்தது. எடுத்து நிதானமாக மண்ணெண்ணெய் தோய்த்த துண்டால் ஒத்தி மீண்டும் கிரீஸில் அமுக்கினார். முதல் வருடத்திலேயே மூத்தவன் ரமேஷ் பிறந்துவிட்டான்.
“எருமை நாயை கட்டி இத்தினை வருஷத்தில என்ன சுகத்தை கண்டன் … சனியன் சனியன் … இவ்வளவு சொல்லுறன் .. காதுல போடுதா பாரு”
காலையிலேயே ஆரம்பித்துவிட்டாள். வழமையான பாக்கியத்தின் திட்டு என்றே நினைத்துக்கொண்டார். திரும்பி பதில் சொன்னாலும் திட்டுவாள். சொல்லாவிட்டாலும் திட்டுவாள். கொஞ்ச நேரத்தில் தானாகவே அடங்கிவிடுவாள் என்று பேசாமலே இருந்தார். முப்பது வருடமாக பொறுமையாக இருந்தவர். இதுவும் அடங்கிவிடும். சைக்கிள் சில்லில் கவனமானார்.
“லீவு நாளுமா அன்னிக்கு கண்டறியாத ஓவசியரிண்ட கிழிஞ்ச சைக்கிள கழுவிப்பூட்டிறத விட்டிட்டு சிவலிங்கத்திட்ட போய் சீட்டுக்காசை வாங்கியோண்டு வா பார்ப்பம் … “
இன்றைக்கு சீட்டுக்காசு தான் பிரச்சனை என்று புரிந்துவிட்டது. சைக்கிள் கடை சாமி சீட்டும் பிடிப்பார். நூறு ரூபாய் சீட்டில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபா சீட்டு வரைக்கும் பிடிக்க ஆரம்பித்தார். முதல் தவணை வசூல் சீட்டு மொத்தமாக பாக்கியம் கைக்கு போய்விடும். அப்படி உழைத்த காசில் தான் ரமேஷை இத்தாலிக்கும் அனுப்பினார்கள்.
அவன் போன இரண்டாம் வருடத்திலேயே பக்கத்துவீட்டு நல்லசிவத்தின் மூத்ததை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டுவிட்டான். காதலாம். வீட்டில் யாருக்கும் தெரியாது. பாக்கியத்துக்கு மகன் மேல் இருந்த கோபம் பூரா சாமி மீது திரும்பியது. அது வரைக்கும் கத்தரிக்காய் புழுவுக்கும், வாழைக்குலை விற்கமுடியாமல் போனதுக்கும் விழுந்த ஏச்சு இப்போது மகன் சொல்லாமல் கொள்ளாமல் காதலித்ததுக்கும் சேர்த்து விழுந்தது. பேத்தி வயிற்றில் இருக்கும்போது மகன் தன்னை கூப்பிடாமல் தன்னோடு ஒன்றாக பங்கு கிணற்றில் கூழான் பிலாப்பழத்துக்கு சண்டை பிடிக்கும் நல்லையாவின் மனைவியை அழைத்தபோது, சாமிக்கு ஏச்சு இன்னமும் கூடியது.
“சிவலிங்கம் வீட்டுக்கு கக்கூஸ் உடைச்சு கட்டுறான் .. நீ இங்க இருந்து சில்லை சிரைச்சுக்கொண்டு இரு .. போய் வாங்கிட்டு வாவன் ஆம்பிளை எண்டா”
இரண்டாவது கூறுக்கு மிச்ச சீட்டுக்காரரை மிரட்டி கேட்கவிடாமல் பண்ணி, தான் மட்டும் கேட்டபோது சிவலிங்கம் மீது சாமிக்கு சந்தேகமாக தான் இருந்தது. விதானை ஒருநாளும் அநியாயம் பண்ணமாட்டான் என்ற நம்பிக்கையில் சாமி சீட்டை கொடுத்துவிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவன் கட்டாமல் உச்ச தொடங்கிவிட்டான். கடைசியாக ஏழு தவணைகள் அவன் சரியாக கட்டவில்லை. கேட்க போகும்போதெல்லாம் சீட்டுப்பிடிக்கிற விஷயத்தை இயக்கத்திடம் சொல்லி மீட்பு நிதி கேட்க வைத்துவிடுவேன் என்று மிரட்டினான். சாமி பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ளவர். ஏன் வம்பு என்று திரும்பிவிட்டார். அதை வந்து பாக்கியத்திடம் சொன்னதும் தான் தாமதம்.
“மாடு. எருமை செக்கு மாடு. விதானை சொன்னா அதையே கேட்டுக்கொண்டு வருது…”
அவள் சொல்லும்போது முன் சில்லை சைக்கிளில் பூட்டி நேர் பார்த்துக்கொண்டிருந்தார் சாமி. இடப்பக்கம் நட்டை இழக்கி, ஒருபக்கம் இழுத்தார்.
“இண்டைக்கு சிவலிங்கம் மாட்டன் எண்டுவான் .. நாளைக்கு கனகநாயகம் கள்ளன் மாட்டன் எண்டுவான் … பே எண்டு கேட்டுக்கொண்டு வரும் இந்த சனியன்”
ரிம் இன்னமும் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்திருந்தது போல தெரிந்தது. ஸ்பானரால் நட்டை இறுக்கி இலேசாக்கி கூர்மையாக நேர் பார்த்தார்.
“கிழட்டு வயசில விளக்கணைச்சா பிறகும் மேல வந்து கை போட தெரியுது .. போய் கைநீட்டி சீட்டுக்காசை வாங்கெண்டா அவருக்கு மூக்கு நீண்டிடும்.”
சைக்கிள் சாமி இன்னமும் கூர்மையாக ரிம் நேர் பார்த்தார். இன்னும் கொஞ்சம் தான். இந்த பக்கம் இரு இறுக்கு. அந்தப்பக்கம் ஒரு இறுக்கு. ரெண்டு ரிம் கம்பியையும் கொஞ்சம் இறுக்க.
“ஆம்பிளை எண்டு வெளில சொல்லிடாத .. உன்னை விட உனக்கு உச்சுற சிவலிங்கத்தை கட்டியிருந்தாலும் காரியமா போயிருக்கும்”
சைக்கிள் சாமி நிமிர்ந்து பார்த்தார். கையில் இருந்த ஸ்பானரோடு அவளை நெருங்கினார். நடு ஹோலில் முருக்கை இலையை சுண்டியபடி இவரை பார்க்காமல் பாக்கியம் அவள் இஷ்டத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். சாமி பக்கத்தில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. குனிந்து இலை சுண்டிக்கொண்டிருந்தவளின் பிடரி நன்றாக தெரிந்தது.
“வீரவான் முக்குற முக்கு ஊருக்கு தெரிஞ்சா சீட்டு காசு கட்டுறவன் கூட உச்சிடுவான் .. அவரும் அவரிண்ட கொ..”
“னங்” என்று ஒரே அடி.
சின்னதுக்கும் கூப்பாடு போடும் பாக்கியம் எந்த சத்தமும் போடவில்லை. அப்படியே சரிந்தாள். சாமி எந்த சலனமும் இல்லாமல் சுற்றிவந்தார். மூச்சுப்பார்த்தார். அந்த ஒரே அடி தான்.
பாக்கியம் செத்து போனாள்.
பின் சில்லை பூட்டி நேர் பார்த்து நட்டு இறுக்கிய பிற்பாடு சைக்கிளை நிமிர்த்தினார் சாமி. டபிள் ஸ்டாண்டில் விட்டுவிட்டு கைகளால் சுழட்டிப்பார்த்தார். எல்லாமே சரியாக இருந்தது போல தோன்றியது. திருப்தியாக இருந்தது. முற்றத்துக்குள்ளேயே ஒரு ரவுண்ட் வந்தார். சீட் உயரம் பதித்து, ப்ரேக் கொஞ்சம் இழக்கி எல்லாமே சரியாக இருந்தது.
உள்ளே போனார். பாக்கியம் அப்படியே கிடந்தாள். தலைப்பக்கம் பூரா இரத்தம் இப்போது கட்டியிருந்தது. ஈக்கள் மொய்த்திருந்தன. பக்கத்தில் கிடந்த கரப்பான் பூச்சி மருந்து டின்னை எடுத்து பத்திரமாக கப்பேர்டுக்குள் வைத்தார். அலுமாரிக்குள் கிடந்த பாக்கியத்தின் இரண்டு மூன்று சேலைகளை எடுத்தார். தலையிலிருந்து அடிக்கால் வரை உடலை சேலைகளால் சுற்றி சுற்றி கட்டினார். பத்தியில் கிடந்த இரண்டு செத்தமிளகாய் சாக்குகளை கொண்டுவந்து தலைப்பக்கமாக ஒன்று, கால்பக்கமாக ஒன்று செருகி, இடுப்பில் வைத்து இளக்கயிற்றால் நன்றாக இறுக்கி கட்டினார். அயர்ச்சியாய் இருந்தது. வீட்டில் என்றுமில்லாத ஒரு அமைதி. பானசோனிக் ரேடியோவில் வர்த்தக சேவையை திருகிவிட்டு தேநீரை இன்னொரு மிடறு குடித்த படியே சாக்கு மூட்டையை வெறித்து பார்த்தார்.
சாக்கோடு சேர்த்து கால் பகுதியை தர தரவேண்டு இழுத்துக்கொண்டு பின் பத்திவழியாக பிலாமரத்தடியில் கிடத்தினார். பக்கத்தில் பாழடைந்து போய் கிடக்கும் பங்கருக்குள் குப்பைகளை கொஞ்சம் அகற்றிவிட்டு, உள்ளே உடலை போட்டார். பத்தியில் மாட்டியிருந்த புளியம் விறகு தூக்கை இழுத்துக்கொண்டு வந்து பங்கருக்குள் அடுக்கினார். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக மண்வெட்டியை எடுத்து வந்தார். அடுக்கிய விறகை மளமளவென நீக்கிவிட்டு, மண்வெட்டியால் மீண்டும் சாக்கின் தலைப்பகுதியில் தடக் தடக் தடக் தடக்கென்று நாலு தரம் போட்டார். மீண்டும் விறகை அடுக்கி, கிடந்த நான்கைந்து டயர்களை தூக்கி போட்டு, அதற்கு மேல் மீண்டும் குப்பைகளை போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்றவைக்க, கண்ணை எரிக்கும் புளிச்சம் விறகு, டயர் தீய்ந்த நாற்றத்துடன் எரிய ஆரம்பித்தது.
கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவர், கிணற்றடியில் போய், சுத்தமாக லைபோய் போட்டு தேய்த்து குளித்தார். நெருப்பு இப்போது ஜீவாலை விட்டு எரிய ஆரம்பித்து பிலா கொப்பு இலைகளையும் கறுக்க ஆரம்பித்திருந்தது. குளித்து முடிந்து உடுப்பு மாற்றி, வெள்ளை சாரம் சேர்ட்டுக்கு மாறியவர், மீண்டும் இரண்டு டயர்களை நெருப்புக்கு மேலே போட்டுவிட்டு, வீட்டை பூட்டி கேட்டை கொழுவிக்கொண்டு, ஓவசியரின் கழுவிப்பூட்டிய சைக்கிளில் சைக்கிள் கடை சாமி
சிவலிங்கத்தின் வீட்டுக்கு புறப்பட்டார்.
நன்றி ; கதை தளம்