கடனும் மனைவியாகிறது -- மெய்யன் நடராஜ்

உழைப்பதிலான
பேரானந்த பானத்தை
உல்லாசமாய் உறிஞ்சிக் குடிக்கும்
உல்லாசப் பறவை.

வாங்கும்போது தெய்வமாகவும்
கொடுக்கும்போது சாத்தானாகவும்
மனதுக்குள் உருவகமாகும்
மாயக்கண்ணாடி

ஒரு கன்னிப் பெண்ணின்
காதலைப்போல
போராட்டத்துடன்
கிடைக்கப்பெற்றாலும்
எப்போது வேண்டுமானாலும்
திரும்பி வந்து விடக் கூடிய
விவாக ரத்தாகிப்போன
மனைவியைப்போல்
விட்டுப்போனாலும்
மறுபடியும் திரும்பி
வந்து விடுகிறது
வட்டி என்னும் குழந்தையோடு.

இரண்டிலும்
கட்டுதல்கள் இருப்பதாலோ என்னவோ
கட்டிய மனைவியைப்போல்
கட்டிய வட்டிக்குப் பின்னாலும்
விட்டுப்போகாமல் இருந்துவிடுகிறது
சில கடன்கள்.

மொத்த அன்பும்
புகுந்த வீட்டுக்கு என்று
காட்டிக்கொண்டாலும்
பிறந்தவீட்டுக்கான
அன்பின் விகிதத்தை
மறைத்து வைத்திருக்கும்
மனைவியைபோல
மொத்த தொகையும்
நமக்கென்றாலும்
வட்டியின் வீதம் கழிந்த
மீதி மட்டும் கைகளில் என்பதால்
கடனும் மனைவியாய்


என்னதான்
சண்டைபிடித்து
தாய் வீடு போனாலும்
கணவனே கண் கண்ட தெய்வமென
திரும்பி வந்துவிடும்
ஒரு நல்ல மனைவியைபோல
விட்டுப்போனாலும்
மறுபடியும் எப்படியாவது
வந்து விடுவதால்
இந்த கடனும் மனைவியாகிறது,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Oct-13, 2:37 am)
பார்வை : 787

மேலே