எதைத்தான் எனக்கெனச் செய்வாயோ
விரைவாய் உணர்வலை பாய்கையிலே
கரைதொட காதல் முனைகையிலே
பிறைப்போல் உதித்தாய் உளத்தினிலே
மறைப்பொருள் ஆனாய் மனதினிலே
கரம்பிடித்தாய் நான் கரைந்திடவோ
வரம்தொடுத்தாய் நான் வருந்திடவோ
சிறைப்பிடித்தாய் நான் சிதைந்திடவோ
மறைந்துவிட்டாய் நான் மடிந்திடவோ
என்னவன் உனைநான் காணாமல்
எத்தனை நாட்கள் வாடுவதோ
அனகன் உனைநான் பாராமல்
அன்னம் உண்பது எங்கனமோ
செந்தமிழ் மொழியால் பகர்வாயோ
செங்கதிர்ப் பேச்சால் கவர்வாயோ
செவிதனை எனக்காய் சாய்ப்பாயோ
கவிதனை கணக்காய் புனைவையோ
பதமாய் பாதம் பதிப்போமா
இதமாய் இதயம் இணைவோமா
மலராய் மதுவாய் வாழ்வோமா
மனங்கள் பிளந்தே வீழ்வோமா
அழிபடும் நிலைதனை ஈவாயோ
அழிபுண் தரும்வழி தகராயோ
இழிபடும் அவலத்தைக் களையாயோ
வழிபடும் அன்பினைப் பொழியாயோ
சதையே இவ்வுடல் என்பாயோ
வதையே கதியெனப் புகல்வாயோ
இதையே விதியெனக் கொள்வாயோ
எதைத்தான் எனக்கெனச் செய்வாயோ