வெளிநாடு வாழ் தமிழர்கள்

எல்லா பயணமும்,
இனிமையானது என்றால்,
மரணத்தை என்ன சொல்வது!

விசா,
அந்நிய நாட்டில்,
அடிமையாகவோ,
அதிகாரியாகவோ,
வேலை செய்ய,
அந்நாடு தரும்,
அழைப்பு மடல்!

இயல்பாய் இருந்த,
மனம்,
நொடிக்கு ஒரு முறை,
பிரிவை மட்டும் எண்ணும்,
தருணம்!

மதிய உணவருந்தும்,
வேளையிலே,
என்னருகில் என் அம்மா,
ஒரு வாய் ஊட்டி விடு மகனே,
என்றார்,
அத்தனை முறை ஊட்டி,
விட்ட,
அம்மா அப்படி கேட்க,
புரியாதவனாய்,
அம்மா முகம் பார்த்தேன்,
திரும்பி நீ வரும் போது,
நான் இல்லை என்றால்,
என்ற கேள்வியோடு,
கண் நிறைய கண்ணீர்!

வெளிநாடு வரும் பலர்,
வேறு வழி இல்லாமல்,
மட்டும் வருவது இல்லை,
நெஞ்சில் நிறைய,
வலியோடும் தான் வருகின்றோம்!

கல்யாணம் முடிந்த பிறகு,
விடுப்பு முடிந்து,
வெளிநாடு போகும் தருணம்,
என் கருவை சுமக்கும்,
மனைவியையும் சேர்த்து,
என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான்,
விமானம் ஏறுகின்றேன்!

நான் பிறந்த முதல்,
எனக்காகவே காத்திருந்த,
என் தந்தையின்,
இறப்பின் போதும்,
வெளிநாட்டில் இருந்து,
நான் வரும் வரை,
காத்திருந்த வேதனை,
நெஞ்சை சுடுகிறது!

எங்களின் பாசத்திற்கு,
உரியவர்களின்,
நலனுக்காக வந்தோமே தவிர,
பணத்திற்காக வரவில்லை!

பிறந்த குழந்தைக்கு,
ஒரு வயது ஆன,
பின்னும்,
அப்பாவை பார் என்று,
அறிமுகம் செய்யும்,
அவலம் எங்களுக்கு மட்டும் தான்!

என்னை வளர்த்த,
பெற்றோரின்,
கடைசி காலத்திலும்,
இல்லாமல்,
நான் பெத்த மகன்,
வளரும் தருணத்திலும்,
அருகில் இல்லாமல்,
என்ன வாழ்க்கை இது!

கல்யாணம் முடிந்த,
பத்து வருடம்,
கழித்து தான்,
நாங்கள் சேர்ந்து,
வாழ்ந்த ஒரு வருட நாளே,
முழுமை பெறும்!

உலகில் உள்ள,
வேதனைகளின்,
மொத்த உருவம்,
நாங்கள் தான்!!!

(என் வாழ்வில் நான் கண்டது)

எழுதியவர் : ஷர்மி கார்த்திக் (10-Nov-13, 4:54 pm)
பார்வை : 1335

மேலே