இன்றைய தமிழகம்
இரண்டிலை படம் போட்ட
பஸ்ஸில் ஏறு!
இரண்டுதெரு தள்ளி நீயும்
இறங்கிப் பாரு!
அருகிலேயே அரசாங்க
டாஸ்மாக் பாரு!
வயிறுமுட்டக் குடித்துவிட்டு
வழியைப்பாரு!
பசிவந்தால் மலிவு விலை
இட்லி ஜோரு!
விழு முன்னே வீட்டைக் கொஞ்சம்
நினைத்துப்பாரு!
மனைவி மக்களைக் கொஞ்சம்
நினைத்துப் பாரு!
இன்றாவது ஒழுங்காய் நீ
வீடு போய்ச் சேரு!
பலநாளாய்க் காத்திருக்கும்
மனைவியைப் பாரு!
பசியோடு காத்திருக்கும்
பிள்ளையைப் பாரு!
மலிவு விலைக் காய்கறிகள்
கொஞ்சம் வாங்கு!
மளிகை சாமான் வீட்டுக்குக்
கொஞ்சம் வாங்கு!
அறிவான பிள்ளையினை
அணைத்துப் பாரு!
அன்பான மனைவியுடன்
கொஞ்சிப் பாரு!
அழகான வாழ்க்கையினை
வாழ்ந்து பாரு!
உலகத்தில் உயர்வடைவாய்
செய்து பாரு!
இனியும் நீ தினம் குடித்தால்
உடலுக்குத் தீங்கு!
சீக்கிரமே ஊதிடுவார்
உனக்குச் சங்கு!