குழந்தைகள் தினம் யாருக்கு
"குழந்தைதினம்" இந்தியா இங்கு
குல்லா மாமா பிறந்தநாள் இன்று
குழந்தை எமது நிலைமை கண்டு
குழம்பாதீர்கள் உண்மை உண்டு..!
கருவில் உதிக்கும் உதிரம் முதலே
கலைப்பார் உயிரை உறவை போக்கி
பூமியில் காலடி வைத்தோம் என்றால்
பூக்களை சுற்றி பெரும் பூகம்பங்கள்..!
ஆராரோ செவியில் சொல்வாரில்லை
அமைதி தாலாட்டில் தூங்குவதுமில்லை
அரவணைத்து தூக்க பாட்டிகளில்லை
அன்பாய் கொஞ்ச தாத்தாவுமில்லை..!
அம்மா அப்பா அவரவர் வேலை
ஆதரவின்றி அடுத்தவர் கையில்
அதுதான் பலரின் பருவம் என்றால்
அதைவிட கொடுமை கேட்டு பாரீர்..!
வந்து பிறக்கும் சிசுவில் கொடுமை
வருடம் தோறும் நான்கு லட்சம்
நிம்மோனியா ஒருநோய்மை கண்டு
நிற்காமல் போவுது சாவை தின்று..!
சிறுமிகள் என்றால் சிதைக்கப்பட்டு
சீரழிப்போர் ஏது கணக்கிலும் இல்லை
சிறுவன் என்றால் சிறு தொழிலாளி
சிறைபோல் வாழ்க்கை அவனது எல்லை..!
பள்ளி படிப்பு காண்போர் இல்லை
துள்ளும் பருவம் துடிப்பார் இல்லை
கள்ளமில்லா மொழி கேட்பார் இல்லை
அள்ளி எடுக்க உடன் பிறப்பும் இல்லை..!
குழைந்தை பருவம் குதூகலம் அன்று
கும்மிருட்டிலே நம் குழந்தைகள் இன்று
“குழந்தையர் தினம்” யாருக்கு என்று
குழம்பாமல் சற்று சிந்திப்போம் நின்று..!