அழுக்காறு எனஒரு பாவி

அழுக்காறு எனஒரு பாவி
+ பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குழம்பில்
விழுந்தவர் எழுதல் உலகினில் உண்டோ?
அழுக்காறும் அதுபோல்ஒரு கொதிக்கும் குழம்பாறு.....
அழுக்காறுஓர் அழுக்குஆறு----அது
ஒழுக்காறு தனையே கொல்லும் இழுக்காறு......
அழுக்காறு வழக்காறு ஆனால்,---வாழ்க்கை
விழிக்காது; என்றும் பிழைக்காது.....

அழுக்காற்றின் ஆக்கம்---அது
ஏழ்மையின் தேக்கம்....
அகத்தினில்ஓர் வீக்கம்--பேர்.
ஆபத்தின் தாக்கம்.....

வாழ்நாளை வீழ்நாளாய்
எழுதிச் சேர்க்கும்....
பாழ்நாள் பலவற்றைப்
பங்காளி ஆக்கும்....

விழியின் உறக்கத்தை வழித்தும் எடுக்கும்.....
கழிபெரும் துயரை மழையெனப் பொழியும்....
கழுகுப் பார்வை கொண்ட அழுக்காறு
முழுதாய் மனிதனை விழுங்கி உண்ணும்....

அழுக்காறு இழுக்காது
விழுமத்தில் வீழ்த்தும்....
அழுத்தத்தில் ஆழ்த்தும்...
வழியியில் வரும்நல் வாழ்வினை
வழுக்கச் செய்து பழுதாக்கும்---பாழும்
குழிக்குள் தள்ளும்---சுழலும்
பழிக்கும் ஆளாக்கி ஒழிக்கும்........

விழுக்காட்டு அளவுக்குள் நுழையாத
பழுதுபடு ஆசைகளை விழுதாக்கும்....
புகழினைச் சுருக்கும்; அறுக்கும்....
இகழினை நெருக்கும் பெருக்கும்;

அழுக்குஆறு அழுக்குஆழி யானால்
முழுக்கவும் வாழ்க்கை பழுதாகி
முழுகிப் போகும்---உடன்அது
அழுகிப் போகும்; சாகும்....

விழிப்புணர்வு விழித்தால்--மூளும்
அழுக்காறு வீழும்;
விழிப்புணர்வு அழுக்காற்றை
வழிமொழிந்தால்---நாளும்
அழிவும், அழுகையும் சூழும்...
வாழ்க்கை தாழும்....

அழுக்காற்றை அழித்தொழிக்கும் முயற்சியும்,
முழக்கமும் எழுந்தால்
விழுப்பேற்றின் மொழிகளே அழகெனச்
செவிகளில் நுழையும்.....

அழுக்காற்றை அகற்றிக்--கைகழுவி
உழைத்து நீஉயர்ந்து எழுந்தால்,
பிழைப்புஅது தழைக்கும்--வள்ளுவம்
கழித்த அழுக்காற்றை மழித்து
விழிக்கும் நாள்தான்--உனக்கும்
செழிக்கும் வாழ்வு கொழிக்கும்...

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (14-Nov-13, 9:38 pm)
பார்வை : 97

மேலே