வேண்டுகிறேன் ஒரு வேகத்தடை

வேகங்கள் புகுத்திவைத்து
வளர்வென்னும் பட்டைதீட்டி
எப்பொழுதும் பின்கழுத்தை
இலக்குகளாக்கித்
தொங்குகிறதொரு பட்டாக்கத்தி...

இரண்டுநாட்கள் உயிருலர்த்தி
எண்ணமும் வியர்வையுமாய்
நான்முனைமடி சதுரக்
காகிதங்களில் மயிலிறகுப்
படங்களுமான காதல்கடிதம்
தின்று....
மின்னஞ்சல் குறுஞ்செய்திகளில்
கேலிச்சித்திர புன்னகையோடு
காதல் மொழிந்து ஏப்பமிடுகிறது
வேகங்கள்...!!!

இரட்டைஜடை பெண்ணவளை
இரண்டுகாத தூரம்விட்டு
அமைதியாய் பின்தொடர...
அவளுணர்ந்த அடுத்தகணம்
உன் பள்ளிப்பை சரியப்
போகிறதெனச் சொல்லி
முன்னெழும்பி வளைவில்
மறைந்தோடும் மிதிவண்டிகள்
பறித்து....!!
வளைவுதிரும்பும் நிலா
வதனியவளை வதைத்துத் துவைக்க
திராவகக் கையுறையும்
தானியங்கிச் சக்கரங்களும்
திணித்திருக்கிறது
வேகங்கள்...!!

உருள்கல்லில் ஆண்கையும்
உறைகல்லில் பெண்கையுமாய்
மாவுக்கலவையோடு மனதும்
அரைந்திருக்க....கல்நிலையென்பது
கண்களுக்குள் இடம்பெயர்ந்து
இமைக்காமல் வளர்த்த
காதலொழித்து.......
இடதறையில் மரமும்
வலதறையில் மண்ணுமாய்
நடுவறையில் சுழல்வதும்
சுற்றுவதுமாய் வேகங்கள்....!!!

இஞ்சி ஏலம் திராட்சையோடு
வெல்லப்பாகு பதம் பார்த்து
ஒவ்வொன்றாய்
அள்ளியிட்ட அழகுப்பொங்கல்
இறைத்துவீசி .....
ஒட்டுமொத்தமாய் உள்ளேற்றி
அழுத்தக் காற்று பீய்ச்சியடித்து
பெருங் கூச்சலிட்டு
புழுங்கிப் பரிமாறியிருக்கிறது..
வேகங்கள்....!!!

வாழ்வுதனை வாழ்வியலாய்
ரசித்துப் பருகிய மானுடத்தை
தேய்பிறை பரிணாமங்களில்
சுகங்கள் ஊட்டி
சோம்பேறிகளாக்கி
திரும்பி பார்க்காமல்
முன்செல்கிறது வேகங்கள்...!!!

வேண்டுமெனக்கு ஒரு
வேகத்தடை...!!!

எழுதியவர் : சரவணா (15-Nov-13, 2:40 pm)
பார்வை : 57

மேலே