உள்ளமே உற்றதுணை

உள்ளமே உற்றதுணை
**********************************
[ ஆக்கம் இழந்தேம்என்[று]
அல்லாவார், ஊக்கம்
ஒருவந்தம் கைத்[து]உடை யார்.
திருக்குறள் 0593 ]

உடைந்த கைகளாலும்
உழைக்க முடியும்---
உடைந்த உள்ளத்தால்
எதனைக் செய்ய முடியும்?

உள்ளத்தை ஒடித்துவிடாதே---
உள்ளத்தை உடைத்துவிடாதே---துன்ப
வெள்ளத்தில் ஆழ்த்திவிடாதே---
உளதையும் ஒழித்துவிடாதே---

உடைந்த கைகளை
உருவாக்க உண்டு மருந்து---
உடைந்த உள்ளத்தை உருவாக்க
உள்ளம் தானே மருந்து---

வெல்லும் உள்ளத்தை
உள்ளம் உருவாக்கட்டும்---
கல்லுக்கு ஒப்பான உறுதி
காலூன்றி நிற்கட்டும்---

ஆக்கத்தை ஆக்கும்
ஊக்கம்--உள்ளத்தில்
நீக்கமற நிறையட்டும்---
புத்தம் புதிய பூக்கள்
பூத்துக் குலுங்கட்டும்---

உள்ளம் உடைந்துவிட்டால்
உன்காலடி நிலமும் வெகுதூரம்---
உள்ளத்தில் ஊக்கம்
ஊற்றெடுத்தால்--அந்த
உயரத்தில் உள்ள நிலவும்
உள்ளங் கைக்குள்---

உள்ளமே உற்றதுணை---
இல்லை அதற்[கு]இணை--

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (16-Nov-13, 6:49 pm)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 65

மேலே