ஹலோ...

ஹலோ... ஹலோ...
மறு முனையிலிருந்தும் ஹலோ...
என்ன க்ளியரா...
ஆ.... கிளியர் சொல்லுங்க...
அப்புறம்......
இந்த ஒன்றரை வருடங்களில்
எத்தனை கோடி ஹலோ ..
அப்புறம்...
வேற என்ன விசேஷம்...
பிறகு....
ஆ சொல்லுங்க..
ஆ கேக்குதா...
நாம் நேரில் இருந்து பேசாத
எத்தனையோ வார்த்தைகள்
தொலைபேசிக்குள்....
"ஒகே வைக்கன்... bye "
"பிறகு வாறன்... bye "
ஏற்கனவே பிரிந்தவர்கள்தான் - என்றாலும்
தூரத்தில் இருந்து கொண்டே
அடிக்கடி பிரிகின்றார்கள்
என்ன ஒரு விந்தையோ
இப்படித்தான் பேச வேண்டும் - என்று
எப்படித்தான் எம்மையும் தொற்றிக்கொண்டதோ
இந்தக்கலாச்சாரம்
தேவைகளை அதிகமாக்கி
தேடல்களை தூரத்தில் வைத்து விட்டது
நாகரீகம் .
அழைப்பு வசதியை அருகில் வைத்து
தொடுகையை தூரமாக்கி விட்டது
தொழில்நுட்பம்
அவனவன் பெயரோடு
இலக்கம் இரண்டை சேர்த்து
காதலிக்கு பெயர் வைப்போம்;
தவறிய அழைப்புக்களில்
அப்பெயர் வந்து
சிணுங்கி விட்டுப்போகும்..
என்ன ஒரு சித்தாந்தம் !
அவசர அழைப்புக்குக்கூட
துணையவளின் இலக்கத்தைத்தேடுகின்றது
பழகிப்போன விரல்கள்
என்ன ஒரு கொடுமை
முத்தம்களின் சப்த நாடியே
ஸ்பரிசம்களாக இருந்த போதும்
சத்தம்களை மட்டுமே சப்த நாடியாக
தேர்ந்தெடுத்த ...
துரதிஷ்டவாதிகள்
பிரிந்து வாழ்பவர்கள்......
உதடும் உதடும்
உரசவில்லை என்றாலும்
காதுகளை வார்தைகள் வந்து
முத்தமிட்டு செல்வது - என்னமோ
ஆறுதல்தான்.
வார்த்தைகள் எப்படித்தான்
காற்றில் சுழியோடி
காதுகளை தொடுகின்றதோ .....
விதைப்பது ஓரிடத்தில்
விளைச்சல் இன்னோரிடத்தில்...
முன்னேறித்தான் போய்விட்டது
தொழில்நுட்பம்
ஹலோ... ஹலோ...
ஹலோ... ஹலோ...
ஹ்ம்ம்ம்ம்................
சிக்னல் வீக்!!