நாட்குறிப்பு

உள்ளத்தின் உணர்ச்சிகளை
எண்ணத்தில் நிறுத்தி
எழுத்தாக்கிய ஒருவனின்
நாட்குறிப்பு பேசுகிறது,
“பால்யப் பருவத்தில்
அவள் ஸ்பரிசத்தின்
சுவாசம் நுகர்ந்த நாள்முதலாய்
காதலால் கவிதைகள் கிறுக்கிட
ஆதலால்,
மெளனத்தில் பிரியா இதழ்களாய்
என்னையும் எழுதுகோலையும்
ஆக்கியது நீ...”
என்றே தன் நன்றி உரைத்த போது
மின்விசிறியின் காற்று அதட்ட
ஆடிய ஏட்டிற்குள் ஒளித்த பேனாவை
காட்டியபடி தொடர்கிறது,
“என்னை,
அலைந்து கழித்த அத்தனை நாட்களிலும்
ஊரோடும் உறவோடும்
செலவிட்டு செத்த நிமிடங்களைப்
பத்திரமாய் பக்குவமாய்
பதப்படுத்தி வைக்கும் பெட்டகமாய்
நீயாக்கி, நட்பு வளர்த்தாய்...”
என்றே எண்ணுமந்த கணம்
காற்றால் அடுத்தடுத்து புரண்ட பக்கங்கள்
அணைத்துக் கொண்ட பேனாவை
மறைத்து தொடர்கையில்
“விரல்களுக்கிடையே
அகப்பட்ட பேனா அழுத்தும் போதெல்லாம்
எழுத்தால் தொடுவதுணர்ந்து
என் நண்பன் வந்தானென்று
பூக்களீன்றச் செடியாய் மகிழ்கிறேன்...”
என்றது,
தடைபட்ட மின்சாரத்தால்
தடைபட்ட புரளும் ஏடுகள்
மெளனமென்ற கொடியேற்றிய கணம்,
“நான் கண்ணாடி தான்,
என் மீது விழுந்த பிம்பம்,
பிரதிபளிப்பாய் வெளிவந்து
எழுத்துருவில் என்மீதமர்ந்த
உன் மனம்..” என்ற பொழுது
வந்த மின்சாரம்
கலைத்த மெளனம்,
“ஊருக்கும் பொய்யாய்
உறவுக்கும் பொய்யாய்
உள்ளமொரு வழியிலுமாய்
உடலொரு வழியிலுமாய்
வாழ்ந்த உன் போர்க்கள நாட்களினை
பகிர்ந்து கொள்ளும் நண்பன்...”
என்று ஆறுதல் தந்த நேரம்,
புரண்ட பக்கங்களில் கடைசி ஒன்றில்
‘என் தற்கொலைக்கு
நானே காரணம்’ என்ற
கல்லைச் சுமப்பதறியாத
நாட்குறிப்பு.

எழுதியவர் : இர.சிவலிங்கம் (5-Dec-13, 9:45 pm)
பார்வை : 146

மேலே