என் கால்கள் ஓடுகிறதே

பத்து விரல்களை பதித்து
நரம்புகளை ஆங்காங்கே கோர்த்து விட்டு
நகமேடை சில அமைத்து
பக்குவமாய் வார்த்தெடுத்த
என் கால்கள் ஓடுகிறதே......

வந்த வேலை முடிந்தெழுந்து
வசை சொற்களை வாங்கி கொண்டு
சுற்றமதின் சுவாசம் தேடி
கால்கள் ஓடுகிறதே.....

வாசலில் வழியும் கூட்டம் கண்டு
விதியை கொஞ்சம் மதியால் தட்டி
மதில் சுவர் ஒன்றை தாண்டி
கால்கள் ஓடுகிறதே........

கண்ணாடியுடன் களவாடும் சுவர்
குருதி பார்க்க வீறு கொண்டு
வெட்டி கிழித்து,
விளையாடிய நிழல் அறியாமல்
கால்கள் ஓடுகிறதே............

ஓராயிரம் கற்களோடு
ஆங்காங்கே முட்களும் நிறைந்த
ஓடுபாதை ஒன்றினிலே
காற்றோடு போட்டி போட்டு
கால்கள் ஓடுகிறதே.............

வழி தனில்
பச்சை வெளி கண் சிமிட்ட
மழை துளி மண் ஒட்ட
மேகமது பின்தொடர
மசியாமல்
கால்கள் ஓடுகிறதே...............

மேல் சட்டை மேனி ஒட்ட
கால் சட்டை புழுதி ஒட்ட
முட்கள் கொஞ்சம் பாதம் ஒட்ட
காடு நோக்கி
கால்கள் ஓடுகிறதே ..................

கண்டும் காணா காட்டினுள்ளே
வேர் மறைந்த செடி ஒன்றை
தேடி கண்டு வர
கால்கள் ஓடுகிறதே......

வேர் மறைந்த செடி ஒன்றில்
கண்டுகொள்ளா கணத்தினிலே
சரிந்து,
செடியிடையே விழுந்து,
புழுதி பட்ட பூ ஒன்றை தேடி
கால்கள் ஓடுகிறதே...............

பூ எடுத்து புழுதி தட்டி
கசங்காமல் உதிராமல்
ஆசை கொஞ்சம் அதன் மேல் கொட்டி
என் மழலை பெண்ணுக்கு மலர்சூட்ட
கால்கள் ஓடுகிறதே......

வெகுதூரம் வந்த களைப்பில்லை
குருதி வலியை காட்டி கொடுக்கவில்லை
வசை சொற்கள் ஞாபகத்திலில்லை
வீடு நோக்கி
கால்கள் ஓடுகிறதே........

ஓய்ந்து விட்டது
என் கால்கள் ஒய்ந்து விட்டது
தேவதை முன் நின்று ஒய்ந்து விட்டது.

இரை தேடி
கரை தாண்டி சென்ற பறவை
கூடைந்தவுடன்
குட்டிகுருவிகளின் நாடல் போல
என் குட்டியும் ஓடி வந்தாள்........

எடுத்து வந்த பூஅதை
எடுத்து நீட்ட
எகிறி குதித்து
எச்சரிக்கையோடு பெற்று கொண்டாள்......

தலை பின்னி
பூச்சூடி
என்னை திண்ணை அமர்த்தி
ஊர் கூட்ட சென்று விட்டாள்.........

அவள் சிரிப்பினிலே
வந்த வழி மறந்ததம்மா
வலியும் அதை மறந்ததம்மா...

கால்கள தயார்
பூ தொலைத்த காம்பை கண்டு
பூ கண்ட மோச்சம் பற்றி
சொல்லி வர
என் கால்கள் ஓட தயார்.....

எழுதியவர் : பொ.நகுல்சாமி. (15-Dec-13, 8:30 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 95

மேலே