அவர்கள் இறக்கவில்லை
உயிருக்கு உயிராய்
சுமந்த கனவுகள்
புதைக்கப்பட்ட
உவர்த் தரை
அங்கே இன்னமும்
அவர்கள்உலாவிக்
கொண்டிருக்கிறார்கள்.
கண்டல் செடிகளோடும்
காற்று வெளிகளோடும்
கதை பேசியபடி.
முழு நிலவில்
பனி நனைத்த புற்களில்
முகம் துடைத்து
எழுந்து இனி நடக்கும்
நாட்களை எழுதிக்
கொண்டு இருக்கிறார்கள்.
மண்ணோடு புதையாது
இம் மண்ணின் வரலாறு!
அந்த அசரீரி மறுபடியும்
காதில் வீழ்கிறது.
ஆகாயம் ஆனந்தக்
கண்ணீர் வடிக்கிறது
அந்த அவலங்களின் ஒரேயொரு
சாட்சியான நிலவும்
கடலும் கைகுலுக்கிக்
கொள்கின்றன.
ஆம் அவர்கள் இறக்கவில்லை
எழுந்து நிற்கிறார்கள்!