அவர் மனிதன்தான்
கனடா, இன்று காலை பேருந்தில் 81 வயது முதியவரை சந்தித்தேன். என் பக்கத்தில் வந்தமர்தார். முதலில் ஆங்கிலத்தில் பேசினார், பின்பு நான் தமிழன் என்றறிந்ததும், தமிழில் பேச்சை தொடர்ந்தோம். அவர் பேச்சில் ஒரு ஏக்கம், அது அவர் கண்களிலும் தெரிந்தது. அப்போது அறிந்தேன், அவர் இழந்தது ஏராளமென்று...
தன் நாட்டையும், தான் பிறந்த ஊரையும், தன் உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு கோடியில் வாழ்வதை..
ஏக்கமாய் பார்க்கும் கண்கள், நித்தம் எதையோ தேடுது
கனவிலும் பிரியாத ஊரை, மனமோ நாடுது
பிழைக்க வெளிநாடு போவோர், நானோ உயிரை பிழைக்க வந்தேன்
இழந்தது ஏராளம், ஈழத்தில் இறப்பது அன்றாடம்
வாடிக்கையானது வாழ்க்கையில், வேடிக்கை பார்ப்பவன் நான் மனிதனா?
என்ற கேள்வியை அவரிடமே கேட்டுக் கொண்டார்..
அவர் மனிதன்தான். அவர் கண்கள் கலங்கின..
அவர் இறங்கவேண்டிய இடம் வந்தது.
அவர் கால்கள் மெல்ல நடந்தன..
அவர் நடந்த பாதை, சிலர் நடந்த பாதை..
அவர் எண்ணப் பாதை, பலர் நடக்கா பாதை..
ஓட்டுனரிடம் நன்றி கூறினார்..
ஓட்டுனர் பேருந்தை அரை அடி கீழே இறக்கினார்..
பேருந்திலிருந்து பெரியவர் இறங்கினார்..
வாழ்க்கையெனும் பேருந்தில், அவர் பயணம் அவர் ஊரை நோக்கி..
நான் அவரையே பார்த்தேன்...அவர் என்னை பார்க்கவில்லை...
-தினேஷ் (கனடா)